Last Updated : 13 Apr, 2019 12:00 AM

 

Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM

கர்நாடகாவில் 20 சதவீத கமிஷன் அரசு நடக்கிறது: காங்கிரஸ் - மஜத மீது நரேந்திர மோடி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு 20 சதவீத கமிஷன் அரசாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலில் வட கர்நாடகாவில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதியில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

கர்நாடகாவில் முன்பு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 10 சதவீத கமிஷன் அரசாக ( தரகு அரசு) இருந்தது. இப்போது குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதால் 10 சதவீத கமிஷன் (தரகு) தொகை அதிகரித்துவிட்டது. இந்த அரசு 20 சதவீத கமிஷன் அரசாக செயல்படுகிறது. இந்த அரசினால் கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இரு கட்சி தலைவர்களுக்கு தான் நன்மை ஏற்பட்டிருக்கிறது. குமாரசாமியை சுதந்திரமாக செயல்படாதவகையில் காங்கிரஸ் அடக்கி ஆள்கிறது.

குடும்பத்தை மையமாக வைத்து அரசியல் செய்யும் இரு குடும்பங்களும் கூட்டணி அமைத்துள்ளன. இதை இரு கட்சிகளின் கூட்டணி என்பதை விட, இரு குடும்பங்களின் கூட்டணி என கூறலாம். தேவகவுடா தன் இரு மகன்களை முதல்வராகவும், அமைச்சராகவும் ஆக்கியதைப் போல, இப்போது தன் இரு பேரன்களை எம்பி ஆக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ், மஜதவின் குடும்ப அரசியலை கர்நாடக மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த அலையை எதிர்க்கட்சியினரால் தாக்குப்பிடிக்க முடியாது. எதிர்க்கட்சியினரின் பயம் கலந்த பேச்சுகள், பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சியை கர்நாடகா மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தேர்தல் நாடு முக்கியமா? குடும்பம் முக்கியமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்க போகிறது. குடும்பம்தான் முக்கியம் என்பவர்களை அவர்களது வீட்டுக்கே இந்தத் தேர்தல் அனுப்பப் போகிறது. நாட்டைபாதுகாக்கும் காவலர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் போகிறது. இவ்வாறு மோடி பேசினார். பின்னர், ‘‘மன்னரின் வாரிசைப் போல வலம் வருவோர் தேவையா? நாட்டை பாதுகாக்கும் காவலர் தேவையா?’’ என கேள்வி எழுப்பிய மோடி, கூட்டத்தைப் பார்த்து.. ‘‘எங்கே சத்தமாக சொல்லுங்கள், யார் வேண்டும்?’’ எனக் கூறினார். இதற்கு கூட்டத்தினர் ‘மோடி அரசு வேண்டும்’ என உற்சாகத்துடன் பலமாகக் குரல் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x