Last Updated : 13 Apr, 2019 12:00 AM

 

Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM

ராணுவத்தை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாக காங். புகார்; குடியரசுத் தலைவருக்கு நாங்கள் எந்தக் கடிதமும் எழுதவே இல்லை: முன்னாள் அதிகாரிகள் 2 பேர் பேட்டி

ராணுவத்தின் பெயரை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த கடிதத்தை நாங்கள் எழுதவில்லை என்று முன்னாள் ராணுவ ஜெனரல் எஸ்.எப். ரோட்ரிக்ஸ், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தை அரசியல் லாபத்துக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதம் எழுதியதில் முன்னாள் ராணுவத் தளபதி எஸ்.எப் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, ஜெனரல் தீபக் கபூர், விமானப்படை தளபதி என்.சி. சூரி. கப்பற்படை முன்னாள் தளபதி லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ், விஷ்ணு பகவத், அட்மிரல் அருண்பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இதுபோன்ற கடிதம் எதுவும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்டவாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:ராணுவத்தின் பெயர், சீருடை, அடையாளங்கள், ராணுவ வீரர்களின் செயல்களை அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அரசியல் கட்சிகள், தலைவர்கள் இதுபோன்று ராணுவத்தின் பெயர், செயல்களை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவது எப்போதும் இல்லாதது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல்வாதிகளின் இத்தகைய செயல்கள், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீராங்கனைகளின் மன உறுதியையும் போரிடும் திறனையும் பாதிக்கும். ஆதலால், ராணுவத்தின் மதச்சார்பின்மை, அரசியல் சார்பின்மைத் தன்மையை, பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் எந்தக் கடிதமும் எழுதவில்லை என்று ரோட்ரிக்ஸ், என்.சி.சூரி ஆகியோர் மறுத்துள்ளனர்.

ரோட்ரிக்ஸ் கூறும்போது “நான் இந்தக் கடிதத்தை எழுதவே இல்லை. என்னை இணைத்து கடிதம் எப்படி வெளியானது என்பது புதிராக உள்ளது. 42 ஆண்டுகள் நான் ராணுவத்தில் இருந்தவரை எவ்வித அரசியல் சார்பும் என் தரப்பில் இல்லை.. இப்போதும் அப்படியே இருக்கிறேன்” என்றார்.

என்.சி.சூரி கூறும்போது, “இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் எழுதிய விஷயங்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை” என்றார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதனிடையே வாக்குகளைப் பெறுவதற்காக ராணுவத்தை அரசியல் லாபத்துக்காக பாஜக தலைவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது புல்வாமா தாக்குதலுக்கு பாலகோட் தாக்குதல் மூலம் நாங்கள்தான் பதிலடி கொடுத்தோம் என்று ரீதியில் பேசி வருகின்றனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அரசியல் லாபத்துக்காக பாஜக அதை பயன்படுத்தக்கூடாது” என்றார்.

மத்திய அமைச்சர் கண்டனம்

ராணுவத்தின் பெயரை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாக எழுதப்பட்ட போலி கடிதம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “இதுபோன்ற போலி கடிதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x