Last Updated : 11 Mar, 2019 12:52 PM

 

Published : 11 Mar 2019 12:52 PM
Last Updated : 11 Mar 2019 12:52 PM

தேசபக்தி எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல; தேசவிரோதி என அழைக்காதீர்கள்: சிவசேனா சாடல்

தேசபக்தி எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது, அரசியல் எதிரிகளை தேசவிரோதி என அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், இந்த தாக்குதலில் உண்மை இல்லை, ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதேசமயம், இந்த தாக்குதலையும் அரசியல் கட்சிகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இவற்றைக் கண்டித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரைக் கூறி வாக்குக் கேட்பவர்கள் குற்றவாளிகள், உயிர்தியாகம் செய்த வீரர்களின் மரணத்தை அரசியலாக்கியதற்கு அவர்களே பொறுப்பு. அதேபோல, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் உண்மை குறித்து கேள்வி எழுப்புபவர்கள், நமது வீரர்களின் துணிச்சலை அவமதிப்பதற்கு சமம்.

அதேபோல அரசியல் ரீதியாக எந்த எதிர்க்கட்சிகளையும் தேச விரோதி என்று அழைப்பதும் முறையானது அல்ல. இது கருத்து சுதந்திரத்தை மீறிய செயலாகும். தேசபக்தி என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்டதாக்குதல் குறித்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும், அது அவர்களின் கடமை.

புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமை கோரி ஏராளமான அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தாக்குதலின் வெற்றி குறித்து பதாகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டிக்கொண்டு, அந்த தாக்குதலில் கிடைத்த வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றி போல் பேசுகிறார்கள். ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை.

பல பாஜக எம்.பி.க்கள் ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்கிறார்கள். டெலியில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ராணுவ உடை அணிந்து பாஜகவுக்கு வாக்குக் கேட்டார். இதனால் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அடிப்படையில் நாம் நமது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க  தவறிவிட்டோம் ஆனால், சிலரோ வீரர்களின் உடை அணிந்து கொண்டு அவர்களை வைத்து அரசியலுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x