Last Updated : 20 Mar, 2019 09:54 AM

 

Published : 20 Mar 2019 09:54 AM
Last Updated : 20 Mar 2019 09:54 AM

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள்தான்: கூட்டணி அமைப்பதில் மந்தமாக செயல்படும் காங்கிரஸ்

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சை இன்னும் இறுதி செய்யாமல் காங்கிரஸ் கட்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்கம், பிஹார், டெல்லி ஆகிய 3 மாநிலங்களிலும் சேர்த்து 89 தொகுதிகள் வரும் நிலையில், இதில் தனித்து நிற்கப்போகிறதா அல்லது, கூட்டணியா என்பது தெரியாமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் விரும்பினாலும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் கடுமையாக இதை எதிர்த்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால், 7 இடங்களையும் வெல்ல முடியும் என்று காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் நம்புகின்றனர். இல்லாவிட்டால், வாக்குகள் சிதறி அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.

இதற்கிடையே ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சு குறித்துப் பேச தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் முயன்று வருகிறார்.

இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சுகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து விடும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஹாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் நேற்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இருதரப்பினரும் ஏற்கெனவே பேசியபடி காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. அப்போதுதான், டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புகிறது. இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட 22 இடங்களில் இருந்து ஒரு இடத்தில், அதாவது நாசிக் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட விட்டுக்கொடுக்க சரத்பவாருடன் பேச்சு நடத்தப்பட்டது.

அதேசமயம், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு கட்சிகளும் தனித்து போட்டியிடும் முடிவு என்றுகூறி, தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இதற்கிடையே பிஹாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 11 இடங்களில் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பேசி வருகிறோம். கூட்டணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x