Last Updated : 26 Mar, 2019 06:35 AM

 

Published : 26 Mar 2019 06:35 AM
Last Updated : 26 Mar 2019 06:35 AM

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை: டெல்லி, மும்பை, கோவா நகரங்களில் உஷார் நிலை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவாய்ப்பிருப்பதாக உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. இதையடுத்து டெல்லி, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களில் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நியூஸிலாந்திலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகள் மீது ஆஸ்திரேலிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது ஐஎஸ், அல்-காய்தா தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கை தந்துள்ளனர். மும்பையிலுள்ள இஸ்ரேல் தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூஸிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று ஐஎஸ் செய்தித்தொடர்பாளர் அபு ஹசன் அல்-முஜாஹிர் பேசிய ஆடியோ பதிவு புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ளது. பதிலடி தரவேண்டும் என ஆதரவாளர்களிடம் முஜாஹிர் பேசியது தெரியவந்துள்ளதால் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அல்-காய்தா சதிஅல்-காய்தா அமைப்பும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனி நபராகவோ, கார் அல்லது லாரி மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லி, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களில் உஷார்நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து டெல்லியில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மும்பை, கோவா நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x