Last Updated : 30 Mar, 2019 03:27 PM

 

Published : 30 Mar 2019 03:27 PM
Last Updated : 30 Mar 2019 03:27 PM

"பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை இந்திரா காந்தி பெறமுடிந்தால், பாலகோட் தாக்குதலுக்கான பெருமையை ஏன் மோடி பெறக்கூடாது?": ராஜ்நாத் சிங் கேள்வி

பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை இந்திரா காந்தி  பெறும்போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை அழித்த பாலகோட் தாக்குதலுக்கான பெருமையை மோடி ஏன் பெறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குஜராத்தில் உள்ள காந்திநகரில்  கடந்த 6 முறை எம்.பி.யாக இருந்தார். அந்த தொகுதியில் இந்த முறை அமித் ஷா போட்டியிடுகிறார்.

காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அமித் ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின் அகமதாபாத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் காலையில் நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நிதின் கட்கரி, பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், " பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெற முடியும் என்றால், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் பெருமையை ஏன் பிரதமர் மோடி பெறக் கூடாது.

நம்முடைய ராணுவம் மிகவும் வலிமையானது. அதனால்தான் பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கினார்கள். இந்த போருக்குப்பின், நம்முடைய தலைவர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார். நாடுமுழுவதும் இந்திரா காந்தியின் செயல் புகழப்பட்டது.

நம்முடைய 40 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலைப்படைத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தபோது, ராணுவத்தின் கைகளை கட்டவிழ்த்துவிட்டு சுதந்திரம் அளித்தார். கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்ததற்கான பெருமையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெற முடியும். ஆனால், பாலகோட் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து தீவிரவாதிகளை அழித்த பிரதமர் மோடி அந்த பெருமையை ஏற்கக் கூடாதா? " எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், " நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்த்தபோது மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பெயரைக்கூறியே நாட்டை வழிநடத்தக் கூறுகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் என்பது நாட்டை யார் வழிநடத்தத் தகுதியானவர்கள் என்பதை அறிய நடத்தப்படும் தேர்தலாகும்.

நான் இமாச்சலப்பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை, கம்ரூப் முதல் காந்திநகர் வரை அனைத்து இடங்களிலும் மக்களிடம் யார் நாட்டை ஆள வேண்டும் என்கிற கேள்வியைக் கேட்டபோது, மக்கள் அனைவரும் ஒரே குரலில் மோடி, மோடி, மோடி என்றனர்.

நரேந்திர மோடி போன்ற சிறந்த தலைவரை மக்கள்  70 ஆண்டுகளாகக் காத்திருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x