Published : 28 Feb 2019 12:03 PM
Last Updated : 28 Feb 2019 12:03 PM

உங்களால் பிரச்சாரத்தை சில நிமிடங்கள்கூட நிறுத்த முடியாதா மோடி?- காங்கிரஸ் சாடல்

உங்களால் பிரச்சாரத்தை சில நிமிடங்கள்கூட நிறுத்த முடியாதா மோடி என காங்கிரஸ் கட்சி பிரதமருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிக்கிய செய்தி வெளியான நிலையிலும்கூட பிரதமர் மோடி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த இந்திய தேசமும் விங் கமாண்டர் அபிநந்தன் மீட்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நமது பிரதமரால் ஒரு நிமிடம் கூட பிரச்சாரத்தை நிறுத்த இயலவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். நாங்கள் நமது வீரர்களின் துயரங்களுக்கு தோள் கொடுக்கிறோம். அதேவேளையில் மோடி அரசாங்கத்தின் அக்கறையின்மையையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவோம்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோதும் அந்த செய்தியை அறிந்தும் பிரதமர் மோடி ஃபோட்டோ ஷூட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியதும் அதற்கு பாஜக பதிலடி கொடுத்ததும் கவனிக்கத்தக்கது.

ஒமர் அப்துல்லா கண்டனம்..

எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில்கூட பிரதமர் மோடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக தேசத்துக்கு திரும்பும் வரையில் பிரதமர் மோடி அவரது அரசியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். நமது விமானி எதிரிநாட்டில் சிக்கியிருக்கும்போது மோடி மக்கள் வரிப்பணத்தில் அங்குமிங்கும் பயணத்திக் கொண்டு வழக்கமான அரசியல் பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கக் கூடாது" என ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x