Published : 22 Feb 2019 10:10 AM
Last Updated : 22 Feb 2019 10:10 AM

சவுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 850 இந்தியர்களை விடுவிக்க உத்தரவு

சவுதி அரேபிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 850 இந்தியர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு இள வரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தா கின.

இந்நிலையில், சவுதி அரேபிய சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் 850 இந்தியர்களை உடனடியாக விடுவிக்குமாறு இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று உத்தரவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி இளவரசர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயணிகள் அதிகரிப்பு

இதனிடையே, மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஹஜ் பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஹஜ் பயணத்துக்காக இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் 2 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதுவரை இந்த எண்ணிக்கை 1.75 லட்சமாக இருந்தது.

ரூ.7 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கு சென்ற இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2,000 பாகிஸ் தானியர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x