Published : 21 Feb 2019 05:45 PM
Last Updated : 21 Feb 2019 05:45 PM

புல்வாமா தாக்குதல் எதிரொலி: வீரர்களுக்கு விமான பயண சலுகை- உள்துறை அமைச்சகம் அனுமதி

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து துணை ராணுவ படை வீரர்களுக்கு விமான பயண சலுகை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45  சிஆர்பிஎப் வீரர்களால் 45 பேர் கொல்லப்பட்டனர்.

விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்த வீரர்கள் சென்ற பேருந்துகள் மீது, ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரம்பிய காரை பயங்கரவாதி ஓட்டிச் சென்று மோதியதில் இந்தக் கொடூரம் நடந்தது. 78 பேருந்துகளில் 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களை சாலை வழியாகக் கொண்டுவரத் திட்டமிட்ட பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகபட்ச கவனம் செலுத்தாதது குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதையடுத்து துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, துணை ராணுவ படையினருக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் ரயில் பயண சலுகைக்கு பதில், விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், அவர்கள் சொந்த ஊர்களில் இருந்து நெடுதூர பயணத்துக்கு விமானம் மூலமும், குறைவான தூரத்துக்கு பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘துணை ராணுவப்படையில் சாதாரண காவலர் பதவியில் இருக்கும் வீரர் உட்பட 7 லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள் பயன் பெறும் வகையில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமானங்களில் பயணம் செய்யும் சலுகை வழங்கப்படும். குறிப்பாக டெல்லி - ஜம்மு, ஜம்மு - ஸ்ரீநகர் வழித்தடங்களில் இந்த வசதி செய்து தரப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x