Last Updated : 27 Feb, 2019 03:58 PM

 

Published : 27 Feb 2019 03:58 PM
Last Updated : 27 Feb 2019 03:58 PM

பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விமானி அபினந்தன்: வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது

இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

எல்லையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி அபினந்தனை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அபினந்தன் இன்னும் திரும்பவில்லை. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்.

இந்த சந்திப்பில் வேறு எந்த கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கப்போவதில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தகவல் கிடைக்கும்போது உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என சுருக்கமாகக் கூறிச் சென்றார்.

வைரல் வீடியோ:

இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு வீடியோ பரவிவருகிது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபினந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். மேலும், சில தகவல்களைக்கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனுமதியில்லை என்கிறார். நான் பாகிஸ்தான் ராணுவத்திடமா இருக்கிறேன் என்றும் விசாரிக்கிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபினந்தன் சிக்கியதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர்:

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானை அபினந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் தாம்பரம் விமானப்படையில் பயிற்சி பெற்றவர் எனத் தெரிகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இவர் விமானப் படையில் இணைந்துள்ளார். இவரது தந்தை வர்த்தமானும் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x