Published : 19 Feb 2019 05:20 PM
Last Updated : 19 Feb 2019 05:20 PM

குடிபோதையில் ஓட்டினால் வாகனங்களை போக்குவரத்து போலீஸ் பறிமுதல் செய்ய முடியுமா?- வழக்கின் பின்னணியும் விளக்கமும்

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவரின் வாகனத்தை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்யலாமா? அப்படியென்றால் எந்த சட்டப்பிரிவின் கீழ் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீது நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் உத்தரவு பிறப்பிக்கும்போது மனுதாரரின் வழக்கறிஞர் சில முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளார்.

தனது வாதத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முடியாது எனவும் அது ஏன் என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

வழக்கு பின்னணி:

கே.ராகேஷ் ரெட்டி என்ற தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 

அதில், மாதாபூர் போக்குவரத்து போலீஸார் கடந்த 2018 டிசம்பர் 8-ம் தேதி தனது காரை பறிமுதல் செய்ததாகவும் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதால் காரை பறிமுதல் செய்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், இதுதொடர்பாக டிசம்பர் 14-ம் தேதி தனது தந்தையுடன் மாதாபூர் காவல் நிலையத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்றதாகவும் அப்போது, தனது காரை பறிமுதல் செய்தது தொடர்பாக தனக்கு இ-சலான் வழங்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டார்.

ஆனால், காரை போலீஸார் பறிமுதல் செய்ய எந்த சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோ அந்தப் பிரிவுகள் வாகனப் பறிமுதல் நடவடிக்கைக்கு தொடர்பற்றவை என ராகேஷின் வழக்கறிஞர் பி.வி.ஜி. உமேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.

ராகேஷ் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு 185(ஏ), மோட்டார் வாகனச் சட்டம் 130/177 ஆகியன அவரது காரை பறிமுதல் செய்ய உரித்தானது அல்ல என்ற வாதத்தை வழக்கறிஞர் முன்வைத்தார்.

இது சட்டத்துக்குப் புறம்பாக வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்கு ஒப்பாகும். இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வாகனத்தைப் பறிமுதல் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

மேலும், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவரின் வாகனம் விபத்தில் சிக்கினால் மட்டுமே அதனை போலீஸார் பறிமுதல் செய்ய இயலும் அல்லது போதையில் வாகனம் ஓட்டியவரிடம் ஓட்டுநர் உரிமம் போன்ற போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால் பறிமுதல் செய்ய இயலும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய அவசியம் உள்ளதா? என வினவினார்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர், அப்படி வாகனத்தைப் பறிமுதல் செய்வதால் சம்பந்தப்பட்ட நபரை கவுன்சிலிங்குக்கு உட்படுத்துவதுடன் அவரை நீதியின் முன் நிறுத்த முடிகிறது என்றார்.

தொடர்ந்து குறுக்கிட்ட ராகேஷின் வழக்கறிஞர், வாகனத்தைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக ஓட்டுநர் உரிமம், ஆதார் போன்ற அடையாளங்களைப் பறிமுதல் செய்ய வழிவகை உள்ளதாகவும் கூறினார்.

இதன்மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்ற தனது வாதத்தை ராகேஷின் வழக்கறிஞர் நிரூபித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x