Last Updated : 01 Feb, 2019 03:37 PM

 

Published : 01 Feb 2019 03:37 PM
Last Updated : 01 Feb 2019 03:37 PM

இடைக்கால பட்ஜெட் அல்ல; வாக்குகளுக்கான பட்ஜெட்: பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் அல்ல, வாக்குகளுக்கான பட்ஜெட் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பாஜக தலைமையிலான அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல், பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக 4 ஆண்டுகளாகத் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் அது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. விவசாயிகளுக்கு மாத உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து ட்விட்டரில் கூறுகையில், " பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 'இடைக்கால பட்ஜெட் அல்ல, வாக்குகளுக்கான பட்ஜெட்'. காங்கிரஸ் கட்சியின் திட்டங்களைக் காப்பி அடித்தமைக்கு நிதி அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி. நாட்டின் ஏழை மக்களுக்குத்தான் வளங்களைப் பெற முதல் உரிமை இருக்கிறது.

நான் ஏற்கெனவே முன்பு கூறியதுபோல், பாஜக அரசு 2018-19 ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கை அடைய தவறவிட்டது. மீண்டும் சிவப்பு எச்சரிக்கை கொடிகாட்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், " பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டில்தான் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக 8.2 சதவீதம் இருந்தது என அரசு கூறுகிறது. ஆதலால், மற்றொருமுறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரப்போகிறது, 100 ரூபாய் நோட்டைச் செல்லாது என அறிவிக்கப்போகிறார்கள்.

நிதி ஆயோக் துணைதத் தலைவரிடம் கேட்கிறேன், " வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லாமல், ஒரு நாடு ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீத வளர்ச்சி எப்படி சாத்தியமாக முடியும். இதுதான் எங்களுடைய கேள்வி. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது. பின் எப்படி நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ந்துவிட்டது என்று எப்படி நாம் நம்பு முடியும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x