Last Updated : 21 Jan, 2019 08:41 AM

 

Published : 21 Jan 2019 08:41 AM
Last Updated : 21 Jan 2019 08:41 AM

பெங்களூரு சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல்: எம்எல்ஏ அனந்த் சிங் மண்டை உடைந்தது

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில், பீர் பாட்டிலால் தாக்கப்பட்டதில் எம்எல்ஏ அனந்த் சிங்கின் மண்டை உடைந்தது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் மேலிடம் அக்கட்சி எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த 3 தினங்களாக தங்க வைத்துள்ளது.

அமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கும் தப்பிச் செல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. டி.சுரேஷ் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதில் மதுபானமும் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

அப்போது, நீண்டகால‌ நண்பர்களான காம்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷுக்கும், விஜயநகர் தொகுதி எம்எல்ஏ அனந்த்சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கிருந்த பீர் பாட்டிலால் அனந்த் சிங்கை கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அனந்த் சிங்கின் மண்டை உடைந்தது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன‌ர்.

இந்த மோதல் தொடர்பாக போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தை அமைச்சர் டி.கே.சிவகுமாரும் மறுத்துள்ளார். நெஞ்சு வலி காரணமாகவே அனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x