Published : 21 Jan 2019 03:09 PM
Last Updated : 21 Jan 2019 03:09 PM

கர்நாடகாவின் சித்தகங்கா மடாபதி சிவகுமார சுவாமி 111 வயதில் காலமானார்

கர்நாடக மாநிலத்தில் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதி டாக்டர் சிவகுமார சுவாமி தனது 111-வது வயதில் இன்று காலமானார்.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிவகுமார சுவாமி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

நடமாடும் கடவுள் என்று சிவகுமார சுவாமியை அவரின் சீடர்கள் அழைத்து வந்தனர். 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவாவுக்கு அடுத்து நவீன பசவா என்று அழைக்கப்பட்டவர்.

ஸ்ரீ சித்தகங்கா கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், என 125 கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கல்வி நிலையங்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கல்வி போதிப்பவையாகச் செயல்பட்டு வருகின்றன, ஏழைக் குழந்தைகளுக்கு தங்குமிடங்களையும், உணவும் அளித்து கல்வி போதித்து வருகின்றன.

சிவகுமார சுவாமி மறைவையொட்டி, 3 நாள் கர்நாடக மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாளை கர்நாடக மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி அறிவித்தார். தும்கூரு மண்டலத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிவகுமார சுவாமியின் உடல் அஞ்சலிக்காக மடத்தில் நாளை வைக்கப்பட்டு, நாளை மாலை இறுதிச்சடங்குகள் நடத்தப்படும்.

சிவகுமார சுவாமி மறைவு குறித்து முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறுகையில், ''வயது மூப்பிலும் கடைசிவரை கல்விக் கொடை வள்ளலாகவே சிவகுமார சுவாமி திகழ்ந்தார். சமூக சீர்திருத்தவாதியாக பசவாவைப் பின்பற்றி வாழந்து, ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி அளித்தவர்'' எனத் தெரிவித்தார்.

துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா கூறுகையில், ''நவீனகால பசவா சிவகுமார சுவாமி மறைவு மிகப்பெரிய இழப்பாகும். மத்திய அரசு சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்'' எனத் தெரிவித்தார்.

லிங்காயத் சமூகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் சிவகுமார சுவாமிகள் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான பி.எஸ். எடியூரப்பா புகழாஞ்சலி செலுத்தினார்.

சிவகுமார சுவாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் எல்லைகள் கடந்து, மதம் கடந்து அனைத்து மக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ராமநகரா மாவட்டம், மகடி தாலுக்காவில் உள்ள வீரபுரா கிராமத்தில் கடந்த 1908-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சிவகுமார சுவாமி பிறந்தார். இவரின் இயற்பெயர் சிவன்னா. கடந்த 1930-ம் ஆண்டில் விரக்தா ஆசிரமாவுக்கு சிவன்னா வந்து சேர்ந்தார். அப்போது இருந்து மடத்தில் இருந்து வருகிறார் சிவகுமார சுவாமி.

கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசுவாமி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, துணை முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சித்தகங்கா மடத்தில் அஞ்சலி செலுத்த வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x