Last Updated : 21 Jan, 2019 04:08 PM

 

Published : 21 Jan 2019 04:08 PM
Last Updated : 21 Jan 2019 04:08 PM

மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்குப் பின்பும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாரணாசியில் பிரச்சினை இல்லை

பகுஜன் சமாஜின் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதியுடன் சமாஜ்வாதி (எஸ்பி) தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் கூட்டணி அமைத்து உ.பி.யில் போட்டியிடுகின்றனர். இதன் பிறகு வாரணாசி தொகுதியின் எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடி அங்கு மீண்டும் போட்டியிட எந்தப் பிரச்சனையும் இருக்காது எனக் கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி அவரது கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக 2014-ல் முன்னிறுத்தப்பட்டிருந்தார். இதற்காக உ.பி.யின் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டிருந்தார்.  அவரை எதிர்த்த ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலை விட மோடிக்கு பல லட்சம் வாக்குகள் அதிகமாக, வெற்றி கிடைத்தது. எனினும், அப்போது மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலையில் தற்போது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு எதிராக வீசத் தொடங்கியுள்ள அலையால், உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜீத்சிங் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதில், காங்கிரஸ் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அக்கூட்டணியால் பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவிற்கு நெருக்கடி உருவாகும் எனக் கணிக்கப்பட்டது.

இது குறித்து கடந்த வாரம் உ.பி. வந்திருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ், ''பிஎஸ்பி-எஸ்பி கூட்டணியால் பாஜகவிற்கு நெருக்கடி உருவாகி விட்டது. இதனால், அக்கட்சி தாம் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவாரா என பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டும்'' எனக் கருத்து கூறி இருந்தார்.

இந்நிலையில், புதிய கூட்டணியால் பிரதமர் மோடிக்கு வாரணாசி தொகுதியில் போட்டியிட எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஏனெனில், கடந்த 2014 தேர்தலில் மோடிக்கு மொத்தம் 56.37 சதவீத வாக்குகள் கிடைத்தன.

மோடியை எதிர்த்து தம் வேட்பாளரை நிறுத்திய மற்ற கட்சிகளுக்கு அதை விடக் குறைவான சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. காங்கிரஸ் 7.34, பிஎஸ்பி 5.88, எஸ்பி 4.39 மற்றும் ஆம் ஆத்மி 30 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருந்தனர்.  இவர்களில் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் மீண்டும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிட முடியாது என அறிவித்து விட்டார். எனவே, பிஎஸ்பி மற்றும் எஸ்பி மட்டுமே வேட்பாளரை இணைந்து போட்டியில் முன்னிறுத்துவர்.

காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளும் தம் வேட்பாளரை வாரணாசியில் போட்டியிட வைக்கும். இதனால், அங்கு அதிகமாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சிதறும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, பாஜகவிற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது எனக் கருதப்படுகிறது.

இதனிடையே, பிரதமர் மோடியின் வெற்றிக்குப் பின் வாரணாசியில் பல வளர்ச்சித் திட்டங்கள் அமலாகி உள்ளன. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் பாஜகவின் ஒரு பெரிய குழுவினர் வாரணாசி தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கவனித்து வருவதாகவும் கருதப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x