Last Updated : 21 Jan, 2019 08:07 AM

 

Published : 21 Jan 2019 08:07 AM
Last Updated : 21 Jan 2019 08:07 AM

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சசிகலா சிக்குவார்: ஐபிஎஸ் அதிகாரி ரூபா

அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து, சொகுசாக வாழ்வதாக கடந்த 2017-ல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தெரிவித்தார். அப்போது பெரும் பரபரப்பையும்,சர்ச்சையையும் கிளப்பிய அவரது அறிக்கை தற்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் மூலம் உண்மையாகியுள்ளது.

இந்நிலையில் ‘‘இந்து தமிழ்'' நாளிதழ் சார்பில் பெங்களூருவில் உள்ள ரூபாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த வினய் குமார் அறிக்கை, தற்போது ‘‘தி இந்து'' நாளிதழில் ( ஆங்கிலம் ) வெளியாகியுள்ளது. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் முயற்சித்தேன். பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதன் நகலை கேட்டேன். தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், மேல்முறையீட்டின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கை எனக்கு ஒரு வித திருப்தியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.

உங்கள் அறிக்கையில் சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும், வினய்குமார் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதா?

அவை குற்றச்சாட்டுகள் இல்லை. சிறைத்துறை டிஐஜியாக இருந்த நான் முறைப்படி விசாரணை நடத்தி, கண்டுபிடித்த உண்மையான தகவல்கள். அவை அனைத்தும் வினய்குமார் அறிக்கையில் இருக்கிறது. நான் தெரிவிக்காமல் இருந்த சில தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக தனியாக சமையல் செய்தது, அதற்கு ஆதாரமாக சிதறியிருந்த மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றை சேகரித்தது, 5 அறைகளுக்கும் திரை சீலைகள் போட்டது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.

நீங்கள் தெரிவித்த குற்றசாட்டுகளில் எதுவும் வினய்குமார் அறிக்கையில் விடுபட்டுள்ளதா?

ஓரளவுக்கு எல்லாமே இருக்கிறது. சசிகலா தரப்பு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் இதையெல்லாம் சாதித்து கொண்டார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது. அதனை எனது அறிக்கையில் தெரிவித்தேன். வினய்குமார் குழு அந்த புகாரை கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அது எப்போது மேற்கொள்ளப்படும்?

அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக கர்நாடக அரசும், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தான் முடிவெடுக்க முடியும். வினய்குமார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப் போல சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். அதிகாரிகள் சட்டத்தை மீறி, சிறை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள‌தால் கடுமையாக தண்டிக்க முடியும். அரசு ஊழியர் என்பதால் சட்ட விரோத செயல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, கூட்டுசதி செய்தது உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யலாம். அரசும், அதிகாரிகளும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பலாம்.

சிறைத்துறை அதிகாரிகள் மீது மட்டும் தான் நடவடிக்கையா?

சசிகலா, இளவரசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதா?தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி சிறை விதிமுறைகளை மீறிய அதிகாரிகளின் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து, சொகுசாக வாழ்ந்த விவகாரத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே அவர்கள் சலுகை அனுபவித்துள்ளார்கள். அதே வேளையில் இந்த புகார் இருப்பதால் சசிகலாவுக்கு இனி சிறப்பு சலுகை காட்ட முடியாது. நன்னடத்தை விதியை காரணம் காட்டி, தண்டனை காலத்துக்கு முன்பே அவரை விடுவிக்கவும் முடியாது.

அப்படியென்றால், இந்த விவகாரத்தில் சசிகலாவுக்கு எவ்வித சிக்கலும் இல்லையா?

அது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் விசாரணையில்தான் தெரியவரும். ஏனென்றால் சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவிக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் இருக்கிறது. அந்த புகாரை ஆழமாக விசாரித்தால் அதில் தமிழக அரசியல்வாதிகளும், கர்நாடக தொழிலதிபர்களும், இடைத்தரகர்கள் சிலரும் சிக்குவார்கள். டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக போடப்பட்டுள்ள வழக்கில் சிக்கியுள்ள நபருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது. அதையெல்லாம் தீர விசாரித்தால் சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் சிக்க வாய்ப்பு இருக்கிறது.

வினய்குமார் அறிக்கையின் மூலம் உங்களது அறிக்கை உண்மை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் உங்களது அறிக்கை தவறு எனக்கூறி முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ் உங்களிடம் ரூ. 15 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாரே?

ஆமாம். இந்த அறிக்கையின் மூலம் நான் கூறிய அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது. சத்தியநாராயண ராவ் தொடுத்துள்ள வழக்கு நடந்து வருகிறது. இந்த அறிக்கையால் அந்த வழக்கு விரைவில் முடிந்துவிடும். தீர்ப்பு நிச்சயம் எனக்கு சாதகமாக தான் வரும் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அப்படியென்றால் நீங்கள் முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் நஷ்ட ஈடு கோருவீர்களா?

இந்த விவகாரத்தால் நீங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, நெருக்கடிக்கு ஆளானது ஆகியவற்றை நீதிமன்றத்தில் முறையிடுவீர்களா?அவரைப் போல ரூ. 15 கோடி எல்லாம் கேட்க மாட்டேன். இந்த வழக்கிற்காக நான் செலவழித்த பணத்தை மட்டும் கேட்பேன். நியாயமாக பார்த்தால், இந்த விவகாரத்தில் நேர்மையாக செயல்பட்டதற்காக நான் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தப்பட்டிருக்கிறேன். பணியிட மாற்றம், பதவி உயர்வில் தாமதம், துறை ரீதியான ஒதுக்கல் என பல சிக்கல்களை எதிர்க்கொண்டிருக்கிறேன். அதற்கெல்லாம் நீதிமன்றத்தில் பதில் கேட்பேன். எனக்கு எத்தனை சிக்கல்கள் வந்தாலும், உண்மை தெரியவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x