Published : 09 Jan 2019 06:05 PM
Last Updated : 09 Jan 2019 06:05 PM

மத வாழ்க்கையின் கொள்கைகளை மீறியதாக கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை

 

 

கீழ்ப்படிதல் என்னும் ஒழுக்கத்தைத் தொடர்ந்து மீறியதாகக் கூறி, கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசி கலப்புராவுக்கு ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.

 

பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகக் கன்னியாஸ்திரிகள் மேற்கொண்ட போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் லூசியும் ஒருவர்.

 

வயநாட்டில் உள்ள ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் மடத்தில் வசித்துவரும் லூசி, கேரள அரசு நடத்திய பெண்கள் சுவருக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்புக்கு உள்ளானார்.

 

அதேபோல கடந்த செப்டம்பர் 2018-ம் ஆண்டு, பாலியல் பலாத்கார நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். மூலக்கல்லைக் கைது செய்யவேண்டும் என்று வீதியில் இறங்கிப் போராடிய ஐந்து கன்னியாஸ்திரிகளில் முக்கியமானவர் லூசி.

 

இதனையடுத்து, ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபையின் தலைவர் ஆன் ஜோசப், எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ''கடந்த சில வருடங்களாக திருச்சபையின் சட்டங்களுக்கும் மத வாழ்க்கையின் கொள்கைகளுக்கும் எதிராக சகோதரி லூசி இயங்கி வருகிறார்.

 

இதுதொடர்பாக திருச்சபையின் தலைமையகம் அமைந்திருக்கும் ஆலுவா, அசோகபுரத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும். அதில் அவர் தவறினால், திருச்சபையின் கட்டளையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதப்படும். அதைத் தொடர்ந்து சபையின் விதிமுறைகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

திருச்சபை கூறிய கடுமையான நடவடிக்கை என்னும் வார்த்தை, பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று லூசியை அச்சுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x