Published : 03 Jan 2019 06:55 PM
Last Updated : 03 Jan 2019 06:55 PM

ஐஏஎஸ் அதிகாரியை போல சபரிமலை தந்திரியை மிரட்டுவதா? - கேரள முதல்வருக்கு காங்கிரஸ் கண்டனம்

சபரிமலை கோயில் தந்திரியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கீழ் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை போல மிரட்டுவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார்.

இதற்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று எதிர்ப்பு தெரிவித்தார். பெண்கள் வருவது பிடிக்கவில்லை என்றால் சபரிமலை தந்திரி பதவி விலகலாம் எனக் கூறினார்.  முதல்வரின் இந்த பேச்சுக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அழைத்து சென்றது கேரள மாநில போலீஸார். கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 16 போலீஸாரை வரவழைத்து அவர்கள் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா சிவில் சப்ளைஸ் துறையில் பணியாற்றும் சிஐடியூ உறுப்பினர். கோயிலுக்குச் சென்ற இரு பெண்களும் கடந்த டிசம்பர் 24-ம் தேதி அங்கு செல்ல முற்பட்டு தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளை கொண்டு பெண்களை சபரிமலைக்கு ரகசியமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுத்தி பூஜை நடத்தியது தந்திரியின் முடிவு. இதற்காக தந்திரியை முதல்வர் பினராயி விஜயன் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. தனக்கு கீழ் பணி செய்யும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டுவது போல கேரள முதல்வர் மிரட்டுகிறார்’’ என ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x