Last Updated : 01 Jan, 2019 08:47 AM

 

Published : 01 Jan 2019 08:47 AM
Last Updated : 01 Jan 2019 08:47 AM

2019 மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 64 வயதான நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். இதில் பெற்ற வெற்றிக்கு பின் அமைந்த அமைச்சரவையில் 75 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி(91), முரளி மனோகர் ஜோஷி(84) உள்ளிட்டோர் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தனர். அவர்களுக்காக ஆகஸ்ட் 2014-ல் ‘மார்கதர்ஷக் மண்டல்’ எனும் பெயரில் புதிய ஆலோசனைக்குழு உருவாக்கி அதில் அமர்த்தப்பட்டனர்.

இதையடுத்து, வந்த தேர்தல்களிலும் மூத்த வயதுள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மத்திய அமைச்சர்களாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மற்றும் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் 75 வயது முடிந்ததன் காரணமாக அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதே காரணத்துக்காக ம.பி.யின் பாஜக அமைச்சரவையிலும் பாபுலால் கவுர் மற்றும் சர்தாஜ் சிங் ஆகிய இருவரும் கடந்த வருடம் பதவியிறக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலை 2019 மக்களவை தேர்தலிலும் தொடர்ந்தால், தமக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இதில் முதல் தலைவராக அறிவிப்பு வெளியிட்ட மத்திய வெளியுறத்துறை அமைச்சரான சுஷ்மாவை முன்னாள் மத்திய அமைச்சரான உமா பாரதியும் தொடர்ந்தார். இவர்களை வேறு பலரும் தொடர்ந்தால், மூத்த தலைவர்கள்இல்லாமல் கட்சிக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என பாஜகவிற்கு அச்சம் எழுந்துள்ளது. இதனால், தனது மூத்த வயதுள்ள தலைவர்கள் மீதான தடையை பாஜக அகற்ற இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘2019 தேர்தலில் மூத்த தலைவர்களை அவர்கள் தொகுதிகளில் மீண்டும் நிறுத்தினால் வெற்றிக்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் மூத்த வயதுள்ளவர்கள் மீதான கட்டுப்பாடு ரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தன.

மூத்த தலைவர்களான சுமித்ரா மஹாஜன் (75), ம.பி.யின் சிவராஜ்சிங் சவுகான்(59), சத்தீஸ்கரின் ரமண்சிங்(66), ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே(66) ஆகியோருக்கு வரும் மக்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x