Last Updated : 19 Jan, 2019 08:24 AM

 

Published : 19 Jan 2019 08:24 AM
Last Updated : 19 Jan 2019 08:24 AM

காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த 4 எம்எல்ஏ: விளக்கம் கோரி சித்தராமையா நோட்டீஸ்

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காததால் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் போர்க்கொடி தூக்கியுள்ள இவர்கள், பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்களை கசிய விட்டனர். இதனிடையே பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடையே குதிரை பேரம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை திரும்ப பெறுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மஜத கட்சி தலைவர்கள் தங்களது கட்சி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தனர். அதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேரை தொடர்பு கொள்ள முடியாமல் அக்கட்சித் தலைவர் திணறினர்.

அதில் பீம நாயக், ஆனந்த் சிங் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவை நேற்று முன்தினம் சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் - மஜத கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிஹோளி, உமேஷ் ஜாதவ், மஹேஷ் குமத்தஹள்ளி, பி.நாகேந்திரா ஆகிய நால்வரும் பங்கேற்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காததால், இவர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிகிறது.

கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா கூறும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். இந்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்யும் பாஜகவுக்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றார்.

இதனிடையே கூட்டத்தில் பங்கேற்காத பி.நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகிய இருவரும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் தங்களது தனிப்பட்ட பணி காரணமாக மும்பையில் இருப்பதாகவும், அதனால் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x