Published : 07 Dec 2018 08:39 AM
Last Updated : 07 Dec 2018 08:39 AM

உத்தரபிரதேச வன்முறையில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் குடும்பத்தினருடன் ஆதித்யநாத் சந்திப்பு

உத்தரபிரதேச வன்முறையில் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினரை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்துப் பேசினார். இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலந்த்ஷெகர் மாவட்டம் சிங்ரா வதி கிராமத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ம் தேதி பசு இறைச்சி கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் சோதனை சாவடி மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கும் சுமித் குமார் (20) என்ற இளைஞரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்தனர்.

கடந்த 2015-ல் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட் டார். இந்த வழக்கை சுபோத் குமார் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பஜ்ரங் தளம், அமைப்பின் முக்கிய தலைவர் யோகேஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான யோகேஷை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு வீடியோ வெளியானது. அதில் பேசிய யோகேஷ், இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் சம்பவ இடத்தில் தான் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள சுபோத் குமாரின் இல்லத்துக்கு நேற்று சென்று, அவரது மனைவி மற்றும் 2 மகன்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார். அத்துடன் சுபோத் குமாரின் மகன்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இந்த தகவலை முதல்வருடன் சென்றிருந்த காவல் துறை டிஜிபி ஓ.பி.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முக்கிய நபர் கைது

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த யோகேஷ் ராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x