Last Updated : 07 Dec, 2018 09:32 AM

 

Published : 07 Dec 2018 09:32 AM
Last Updated : 07 Dec 2018 09:32 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோரமில் இளைஞர்கள் முயற்சியால் விரைவாக முடிந்த வாக்குப்பதிவு: வரிசையின்றி வாக்களித்த வாக்காளர்கள்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி, இளைஞர்களின் முயற்சியால் அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசை இல்லாமல் மிக விரைவாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்காக, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பல மணிநேரம் நின்று மக்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில், அங்குள்ள வேங்க் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் மிக விரைவாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த மிசோ இளைஞர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

வாக்குப் பதிவுக்காக பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையை மாற்ற நினைத்த மிசோ இளைஞர் சங்கத்தினர், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, அவர்கள், அத்தொகுதியில் உள்ள 966 வாக்காளர்களை 60 என்ற வீதத்தில் பிரித்து தனிதனிப் பட்டியல்களை உருவாக்கினர். ஒவ்வொரு பட்டியலில் இருக்கும் வாக்காளர்கள், எத்தனை மணிக்கு வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்கு தெரியப்படுத்தினர்.

இளைஞர் சங்கத்தினரின் அறிவுரைப்படி வாக்காளர்கள் வந்ததால், பட்டியலுக்கு அரை மணிநேரம் என்ற வீதத்தில் வாக்குப் பதிவு நடந்தது. இதனால், மாலை 3 மணிக்குள் அங்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. வாக்காளர்களும் சில நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க நேர்ந்தது.

நாடு முழுவதும் தேர்தலின் போது, வாக்குச்சாவடிகளில் முதிய வர்களும், பெண்களும் நீண்ட வரி சையில் பல மணிநேரம் காத்திருந்து வாக்களித்து வரும் சூழ்நிலையில், மிசோ சங்கத்தின் இந்த புதுமையான நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

முன்னாள் ஆணையர் விளக்கம்

இந்த திட்டம் தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் கூறியதாவது:

தேர்தல் தொடர்பாக எந்தவொரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அனைத்து சூழல்களையும் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும். அனைத்து மாநிலத்துக்கும் ஒரு திட்டம் பொருந்தும் என்று கூறிவிட முடியாது. மிசோரம் மாநிலத்தின் குறிப்பிட்ட அந்தத் தொகுதியின் நில அமைப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x