Published : 07 Dec 2018 10:08 AM
Last Updated : 07 Dec 2018 10:08 AM

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு; வாக்குப்பதிவு தாமதம்

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல வாக்குச்சாவடிகளில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.    

மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும் 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் கொண்ட 13 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்ற 106 தொகுதி களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தெலங்கானாவில் 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர் களில் 12 லட்சம் பேர் புது வாக்காளர்கள் ஆவர். இங்கு 1821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 32,815 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 55,329 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீஸாரும், 279 கம்பெனி ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளிமாநில போலீஸார் 18,860 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகளை 1.60 லட்சம் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பகுஜன் சமாஜுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.

இதுபோலவே ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒரு தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,965 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4.76 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் னணு வாக்குப் பதிவு மற்றும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு அனைத்து பெண்கள் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x