Last Updated : 31 Dec, 2018 12:06 PM

 

Published : 31 Dec 2018 12:06 PM
Last Updated : 31 Dec 2018 12:06 PM

‘கொலை பண்ணிட்டுவா பார்த்துக்கலாம்’: உ.பி. பல்கலை. துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை

மாணவர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டிவிடும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாவுன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக அலகாபாத் பல்கலையில் பணியாற்றிய பேராசிரியர் ராஜாராம் யாதவ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அந்த ஆண்டு அக்டோபர் மாதமே பூர்வாஞ்சல் பல்கலை.யில் ராமர் கதை குறித்த நிகழ்ச்சியைப் பல்கலை.யில் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார் ராஜாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காஜிப்பூரில் கல்லூரி விழாவுக்கு பூர்வாஞ்சல் பல்கலை.யின் துணைவேந்தர் ராஜாராம் யாதவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ராஜாராம் யாதவ் பேசியதுதான் சர்ச்சையாகியுள்ளது.

அவர் பேசுகையில், “பூர்வாஞ்சல் பல்கலை.யில் படித்த மாணவர்களாக இருந்தால், எந்த விஷயத்துக்கும் கண்ணீர் விட்டுக்கொண்டு என்னிடம் வரக்கூடாது. நீங்கள் எப்போது சண்டையிட்டாலும் எதிராளியை அடித்து நொறுக்குங்கள் முடிந்தால் கொலை செய்து விடுங்கள், அதன்பின் வருவதை நான் பார்த்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

இந்தப் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மாணவர்களுக்கு இப்படித்தான் அறிவுரை கூறுவதா. சண்டையிடும்போது கைகலப்பில் ஈடுபடுங்கள், முடிந்தால் கொலை செய்யுங்கள் என்று துணைவேந்தர் பேசுவது சரியா. இதுபோலத்தான் சில இடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுக்கு மாணவர்கள் மத்தியில் கைதட்டல் வந்தது வியப்பளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

பூர்வாஞ்சல் பல்கலை. துணைவேந்தர் பேசிய காட்சி தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில் “ பூர்வாஞ்சல் துணை வேந்தர் பேசிய வீடியோ காட்சிகளைக் கேட்டுள்ளேன் அதைப் பார்த்துவிட்டு நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

உ.பி. மாநில அமைச்சர் சித்தார் நாத் சிங் கூறுகையில், “ இது மிகவும் தவறான பேச்சாகும். இதுபோன்ற பேச்சுகளை துணைவேந்தராக இருந்துகொண்டு பேசியிருக்கக் கூடாது. மாணவர்களுக்கு அஹிம்சையையும், அமைதியையும் அவர் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆனால், அவர் குண்டர் ராஜ்ஜியத்தை கற்றுக்கொடுக்கிறார். மனரீதியாகத் துணை வேந்தர் சரியில்லாமல் இருக்கிறார் என நினைக்கிறேன். இது குறித்து துணை முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் “ எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே உ.பி.யில் புலந்த்செஹரில் போலீஸ் ஆய்வாளர் கும்பலால் கொல்லப்பட்டார். இதற்கிடேயே நேற்று முன்தினம் காஜிப்பூரில் ஒரு கும்பல் காவலர் ஒருவரை கல் வீசிக் கொன்றனர். இந்த சூழலில் மாணவர்களுக்கு வன்முறையைப் போதிக்கும் துணைவேந்தர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x