Last Updated : 27 Dec, 2018 03:32 PM

 

Published : 27 Dec 2018 03:32 PM
Last Updated : 27 Dec 2018 03:32 PM

விவாதம் தொடங்கியது: முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல - மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும், சமூகத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. மனிதநேயத்துக்கானது என்று முத்தலாக் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசினார்.

முத்தலாக் நடைமுறை, சட்டவிரோதம், அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் அதைத் தொடர்ந்து பின்பற்றினர்.  அந்த நடைமுறையைச் சட்டப்பூர்வமாக தடை செய்யும் வகையில், அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில், முத்தலாக் நடைமுறையானது சட்ட விரோதம். அதைக் கடைப்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, நாடாளுமன்றத்தில் புதிய முத்தலாக் தடை மசோதாவைத் திருத்தங்களுடன் மத்திய அரசு கடந்த 17ஆம் தேதி கொண்டு வந்தது. 27-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்தது.

2 மணிவரை ஒத்திவைப்பு

இந்நிலையில், நீண்ட விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்ற இரு அவையும் இன்று கூடின. மக்களவை இன்று காலை கூடியவுடன் ரஃபேல் போர் ஒப்பந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு எனும் இடத்தில் அணை கர்நாடக அரசு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தெலங்கு தேசம் எம்.பி.க்களும் கோஷமிட்டதால், அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால், அவையை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மசோதா அறிமுகம்

அதன்பின் நண்பகலில் மக்களவை கூடியது. அவையில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "முத்தலாக் முறையைத் தடை செய்யவே முத்தலாக் தடை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கோ, நம்பிக்கைக்கோ, சமூகத்துக்கோ எதிரானது அல்ல. மனிதநேயத்தைக் காக்கவே இந்த மசோதாவை அறிமுகப்படுத்துகிறோம்.

நம்முடைய சகோதரிகளின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். முத்தலாக் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. வரதட்சணைக் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைமுறைக்கு வந்தபோது அதற்கு ஆதரவு அளித்தீர்கள். இப்போது, இந்த மசோதாவுக்கும் ஆதரவு அளியுங்கள்.

உலகில் 20 முஸ்லிம் நாடுகள் முத்தலாக்கை தடை செய்துவிட்டன. மதச்சார்பற்ற நம் நாடு ஏன் தடை செய்யவில்லை. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த மசோதாவைப் பார்க்க வேண்டும் “ என்று பேசினார்.

காங்.வலியுறுத்தல்

அப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, ஓவைசி எம்.பி. ஆகியோர் இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபத்யாயே, பேசுகையில், “முத்தலாக் தடை மசோதாவே கூட்டு குழுக்கூட்டத்துக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கேரள எம்.பி. பேச்சு

இதையடுத்து, கேரள எம்.பி. பிரமேச்சந்திரன் பேசுகையில், ''இந்த மசோதாவை நியாயப்படுத்த முடியாது. 2019-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. மிக மோசமாக உருவாக்கப்பட்ட மசோதா. முத்தலாக் செய்தால் முஸ்லிம்களை கிரிமினல்களாகச் சித்தரிக்கும் இந்த மசோதா இந்துக்களையும், கிறித்தவர்களையும் ஏன் குறிப்பிடவில்லை. இதைக் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் ஆண்களைத் தண்டிக்கும் மசோதா

அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் பேசுகையில், ''பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என்று எளிதாக விளக்கம் கொடுக்கலாம். ஆனால், இந்த மசோதா தவறானது. பெண்களுக்குச் சமத்துவத்தைப் பற்றி மட்டும் அரசு பேசுகிறது. நான் கேட்கிறேன், இந்த மசோதாவால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை குறித்து பேசுகிறேன். கணவர் சிறைக்குச் சென்றால் பெண்களின் நிலை என்ன?

முஸ்லிம் சட்டப்படி திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் முறிந்தால் இது சிவில் குற்றம்தான். ஆனால், நீங்கள் இதை கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறீர்கள். இந்து திருமணச் சட்டத்தில் இது இல்லை, வேறு எந்த மதத்திலும் இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளித்துவிட்டு, முஸ்லிம் ஆண்களைத் தண்டிக்கும் சட்டமாகும். இந்த மசோதாவால் சயாரா பானுவுக்கு என்ன வழங்க முடியும்” எனப் பேசினார்.

இந்த மசோதா மீது தொடர்ந்து பல்வேறு எம்.பி.க்கள் பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x