Published : 15 Dec 2018 08:19 AM
Last Updated : 15 Dec 2018 08:19 AM

நீதிபதியின் ‘இந்து நாடு’ கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி யின் கருத்துக்கு அரசியல் வாதிகள், நீதித்துறையினர் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பிடச் சான்று தொடர்பான ஒரு வழக்கு, மேகாலயா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.ஆர். சென், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, 1947-இல் நாடு பிரிவினையின்போது, பாகிஸ்தான் எவ்வாறு தம்மை முஸ்லீம் நாடாக அறிவித்துக் கொண்டதோ, அதேபோல் இந்தியாவும் இந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என எஸ்.ஆர்.சென் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரிய மூத்த நிர்வாகி கமல் பரூக்கி கூறுகையில், "நீதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர், இதுபோன்ற கருத்துகளை தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் இடம் உண்டு என்பதுதான் நமது நாட்டின் தனிச்சிறப்பு. அதனையே கேள்விக்கு உட்படுத்தும் விதமாக பேசிய நீதிபதி மீது நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இதேபோல், மூத்த வழக்கறிஞர் கே.வி. தனஞ்செய் உள்ளிட்ட பலர் நீதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாஸுதீன் ஒவைசி கூறுகையில், "இந்திய அரசமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட நீதிபதி ஒருவர், இதுபோன்ற தவறான கருத்தினை கூற கூடாது. இந்தக் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா என்றைக்கும் இந்து நாடாகவோ, முஸ்லீம் நாடாகவோ மாறாது. அது, எப்போதுமே மதச்சார்பற்ற நாடாகவே திகழும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x