Published : 06 Nov 2018 08:23 AM
Last Updated : 06 Nov 2018 08:23 AM

சபரிமலை கோயிலை மூடுவது நீதிமன்ற அவமதிப்பா?- பாஜக மூத்த தலைவரிடம் மேல்சாந்தி ஆலோசனை பெற்றதால் சர்ச்சை

கடந்த மாதம் ஐயப்பன் கோயில் நடை திறந்தபோது, பெண்கள் வந்தால் நடையை சாத்தினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என கோயில் மேல்சாந்தி, பாஜக மூத்த தலைவருடன் ஆலோசனை நடத்தியது தெரியவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோழிக்கோடு பகுதியில் பாஜக இளைஞரணியின் மாநில கமிட்டியின் உள்ளரங்க கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தரன் பிள்ளை பேசும்போது, “ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டபோது, ஒருவேளை பெண்கள் வந்தால் நடையை சாத்தலாமா என்பது குறித்து தந்திரி என்னிடம் ஆலோசித்தார். குறிப்பாக, நடையை சாத்தினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா எனக் கேட்டார்.

அதற்கு நான், “அப்படி நடந்தால் உங்களை தனியாக விட்டுவிட மாட்டோம். உங்கள் பின்னால் மக்கள் கூட்டம் இருக்கும்” என்றேன்.நாம் முன்னரே திட்டமிட்டதுபோல் போராட்டம் செல்கிறது. நமது இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு யாரையும் கோயிலுக்குள் விடவில்லை. இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நமது திட்டத்துக்குள் அனைவரும் வந்து விட்டனர். சபரிமலை பிரச்சினை ஒரு பொன்னான வாய்ப்பு” என பேசியதாக ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தரன் பிள்ளை கூறும்போது, “அடிப்படையில் நான் வழக்கறிஞர். தந்திரி கேட்டது சட்ட ஆலோசனை அதற்குத்தான் பதில் சொன்னேன்”என்றார். சபரிமலை விவகாரத்தை அரசியல் ஆக்கப் பார்க்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, கோபத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தரன் பேச்சு உச்ச நீதிமன்றம், கேரள மக்களுக்கு விட்ட பகிரங்க சவால். இதை பார்க்கும்போது, கேரளாவை கலவர பூமியாக்கியதும், சமூக செயற்பாட்டாளர்களை திருப்பி அனுப்பியதும் இவர்கள்தானோ என சந்தேகம் வருகிறது”என்றார்.திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் இருந்து கடைசியாக, மக்களாட்சி செய்த மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்மர். 1912-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் இவர் பிறந்தார்.

கேரள பல்கலைக்கழகம் நிறுவியதும், அனைத்து சமூகத்தினரும் ஆலயத்துக்குள் செல்லும்படி ‘சேத்திர ப்ரேவேசன விளம்பரம்’ செய்ததும் இவர்தான். இவரது நட்சத்திர பிறந்தநாளில் சபரிமலை ஐயப்பனுக்கு விசேச பூஜை செய்வதுதான் இந்த ஆட்டத் திருநாள்.ஒரு பெண் வருகைசபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் சேர்த்தலா பகுதியைச் சேர்ந்த அஞ்சு (25) என்ற பெண் தனது கணவர், இரு குழந்தைகளுடன் வந்தார். பம்பை காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அவரது பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x