Published : 09 Nov 2018 02:25 PM
Last Updated : 09 Nov 2018 02:25 PM

முஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை

கேரளாவில் மதத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்த புகாரில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கே.எம்.ஷாஜி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜி, இடது முன்னணி வேட்பாளர் நிகேஷ் குமாரை விட, 2 ஆயிரத்து 287 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தலின்போது ஷாஜி முறைகேடு செய்ததாகவும், மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாகவும் கூறி நிகேஷ் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இஸ்லாம் மதத்தினர் தனக்கே வாக்களிக்க வேண்டும் எனவும், மற்ற மதத்தினருக்கு வாக்களிக்கக் கூடாது எனவும் ஷாஜி பிரசாரம் செய்ததாகவும் நிகேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ராஜன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவுகளின்படி, ஷாஜி முறையற்ற வகையில் மதத்தை பயன்படுத்தி தேர்தலை அணுகி இருப்பதாக கூறினார். இதனால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த நீதிபதிகள், கேரள சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அந்த தொகுதியில் புதிதாக தேர்தல் நடத்தவும், ஷாஜி அபராதமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்சாலி குட்டி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x