Last Updated : 24 Nov, 2018 03:38 PM

 

Published : 24 Nov 2018 03:38 PM
Last Updated : 24 Nov 2018 03:38 PM

என்னை சந்திக்க முடியாதவர்கள், என் தாயை அரசியலுக்குள் இழுக்கிறார்கள்: காங்கிரஸை விளாசிய பிரதமர் மோடி

பிரச்சினைகள் பற்றி பேசமுடியாதவர்கள், என்னைச் சந்திக்க முடியாதவர்கள் என் தாயை அரசியலுக்குள் இழுக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு கடுமையாகச் சாடினார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்பப்பர் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடியின் வயதைக் குறிப்பிட்டு பேசி இருந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரின் வயதுக்குச் சரியாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது. ஆனால், இப்போது பிரதமராக இருக்கும் மோடியின் தாயின் வயதுக்கு ஏற்றார்போல் ரூபாயின் மதிப்பு சரிகிறது என்று பேசி இருந்தார். பிரதமர் மோடியின் தாய்க்கு 97 வயதாகிறது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜ் பப்பரின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி ராஜ்பப்பரை கண்டிக்க வேண்டும், தனிப்பட்டமுறையில் தாக்கிப்பேசுவது நாகரீகமல்ல என்று பாஜக கண்டித்திருந்தது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், சத்தார்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 18 ஆண்டுகளாக நான் காங்கிரஸ்கட்சியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோற்கடித்து வருகிறேன். ஆனால், இன்று என்னைச் சந்திக்க துணிச்சலின்றி என் தாயை அரசியலுக்குள் இழுத்து காங்கிரஸ் கட்சி வீழ்ந்துவிட்டது.

பிரச்சினைகளைப் பற்றி முடியாதவர்கள்தான் ஒருவரின் தாயைப் பற்றி பேசுகிறார்கள். என்னுடைய தாய்க்கு அரசியல்குறித்து எந்தவிதமான சின்ன விஷயமும் தெரியாது. எப்போதும் கடவுளை நினைத்துப் பூஜைசெய்து கொண்டு வீட்டில் இருப்பவரை காங்கிரஸ் கட்சி அரசியலுக்குள் இழுத்திருக்கிறது. என்னை எதிர்க்க முடியாத காங்கிரஸ் கட்சி, என் தாயை அரசியலுக்குள் இழுக்கிறது. என்னுடைய தாயைப் பற்றி பேசுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி டெபாசிட் காப்பாற்றப்படுமா?

எனக்கும், என்னுடைய அரசுக்கும் 125 கோடி மக்கள்தான் முதலாளிகள். ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தும் “மேடம் அல்ல”.(சோனியா காந்தி). மேடம் தலைமையிலான கட்சி ஆட்சியில் இருந்தபோது, அரசின் கஜானாக்கள் எல்லாம் பணக்காரர்களுக்காகவும், பெருமுதலாளிக்களுக்காவும் காலி செய்யப்பட்டன. ஆனால், எங்களுடைய ஆட்சியில் இளைஞர்களுக்காக வங்கியின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நினைத்துக் கவலைப்படும் காங்கிரஸ் கட்சி அவரைக் அம்மா என்று சொல்லி கிண்டல் செய்கிறது.  சிவராஜ் சிங்கின் பணிவு, கடின உழைப்பால் அவரை அம்மா என்று  இந்த மாநில இளைஞர்கள் அழைத்து நெருக்கமாக இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், போபர்ஸ் ஊழலில் சிக்கிய குட்ரோச்சியுடனும் போபால் விஷவாயுகசிந்த நிறுவனமான யூனியன்கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்ஸனுடனும்  நீங்கள் நெருக்கமாக இருந்தது நினைவில்லையா.

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க பாஜக தொண்டர்கள், வேட்பாளர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களின் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா என்று கவலைப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. பிரிவினைவாத அரசியலை காங்கிரஸ் செய்ததால், மக்கள் அந்தக் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x