Last Updated : 10 Oct, 2018 07:04 PM

 

Published : 10 Oct 2018 07:04 PM
Last Updated : 10 Oct 2018 07:04 PM

‘Floccinaucinihilipilification’ : பிரதமர் மோடியின் முரண்பட்ட ஆளுமையை விமர்சித்து சசிதரூர் எழுதிய புதிய புத்தகம்

பிரதமர் மோடியின் ஆளுமையை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீண்ட ஆங்கில வார்த்தை ட்விட்டரில் பெரும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

'தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா' என்ற தலைப்பில் சசி தரூர் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், புத்தகக்தின் தலைப்பு பேசுபொருளாக மாறி இருப்பதைக்காட்டிலும் பிரதமர் மோடியை அவர் விமர்சித்து ஆங்கிலத்தில் கூறிய ஒற்றை வார்த்தைதான் ட்விட்டரில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஆங்கிலத்தில் மிகவும் பெரிய வார்த்தையைக் கையாண்டு அதை மோடிக்கு விளக்கமாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். 400 பக்கத்தில் இந்தப்புத்தகம் எழுதப்பட்டு இருந்தாலும், இந்த ஒற்றை வார்த்தை நெட்டிஸன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Floccinaucinihilipilification என்ற அதிகமான சொற்கள் கொண்ட இந்த வார்த்தைக்கு மதிப்பேஇல்லாத பொருளுக்கு மதிப்பிடுவது என்று அர்த்தமாகும். இதை மோடிக்கு ஒப்பாகக்குறிப்பிட்டு சசிதரூர் விமர்சித்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் நீளமான வார்த்தையாகும்,அரிதிலும் அரிதாக பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும்.

Floccinaucinihilipilification என்ற இந்த வார்த்தையின் மூலம் லத்தின் மொழியாகும். லத்தின் வார்த்தைகளான ஃபிளாசி, நாஸி, நிஹிலி, ஃபிலிபி ஆகியவற்றின் கூட்டாகும். இந்த வார்த்தைக்கு அர்த்தம் சிறிய விலை அல்லது ஒன்றுக்கும் உதவாதது என்பதாகும்.

 

இந்த நீளமான ஆங்கில வார்த்தையைக் குறிப்பிட்டு, தனது புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளதாக சசிதரூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நீளமான ஆங்கில வார்த்தையைக் குறித்துத்தான் நெட்டிசன்கள் பல்வேறு விதங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி குறித்து சசி தரூர் எழுதிய இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் முரண்பட்ட செயல்பாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு ஒன்றாகவும், செயல்பாடு ஒருவிதமாகவும் இருக்கிறது, இதற்கு முன் இதுபோன்ற மிகவும் சர்ச்சைக்குரிய பிரதமரை நாடு கண்டிருக்காது என்று அந்தப் புத்தகத்தில் சசிதரூர் குறிப்பிட்டுள்ளதாக அமேசான் ஆன்-லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் நன்கு புலமை வாய்ந்த சசி தரூர் இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘rodomontade’ என்ற சொல்லாடலை கையாண்டார். இந்த வார்த்தைக்குத் தற்பெருமை அடித்துக்கொள்ளுதல் என்று பொருளாகும். இந்த வார்த்தையை பெரும்பாலும் யாரும் ஆங்கிலத்தில் அறிந்திராத சூழலில் இதை சசிதரூர் கையாண்டார். அது குறித்து டிவிட்டரில் சசி தரூர் கூறுகையில், என்னுடைய சிந்தனையின் சிறப்பான வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய வார்த்தையைக் கவனத்துடன் தேர்வு செய்கிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘troglodytes’ என்ற வார்த்தையை சசிதரூர் அறிமுகப்படுத்தினார். தாஜ்மஹால் குறித்து வினய் கத்தியார் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்த ஆங்கில வார்த்தையை சசிதரூர் பயன்படுத்தினார். இந்த ‘troglodytes’ என்ற வார்த்தைக்கு நாகரீகமற்றவர்கள், இன்னும் வெளிஉலகம் தெரியாமல் குகைகளில் வசிப்பவர்கள் என்று பொருளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x