Published : 09 Oct 2018 13:35 pm

Updated : 09 Oct 2018 13:35 pm

 

Published : 09 Oct 2018 01:35 PM
Last Updated : 09 Oct 2018 01:35 PM

‘வேலையின்மை விரக்தியால் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்’: ராகுல் காந்தி வேதனை

இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விரக்தியால்தான் ஆத்திரமடைந்து, குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது, தடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள ஹிம்மத்நகர் அருகே இருக்கும் கிராமத்தில் 14 மாத குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இந்தப் பலாத்காரத்தில் ஈடுபட்டது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்திர சாஹு என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களால் இதுபோன்ற குற்றம் நடக்கிறது என்று நினைத்த குஜராத் மாநில மக்கள் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால், பல தொழிலாளர்கள் குஜராத்தில் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட முதல்வர்கள் கண்டனம் தெரிவித்தனர். போலீஸாருக்கு இந்தச்சம்பவம் தொடர்பாக 35 புகார்கள் வந்ததையடுத்து, 450 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம் முழுவதும் மோசமான பொருளாதார கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில்துறையை கடுமையாகப் பாதித்துவிட்டன. ஏராளமான தொழிற்சாலைகள், சிறு, குறுநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலையின்மை நிலவுகிறது.

வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத அரசால் இளைஞர்களிடையே மத்தியில் விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இந்தக் கோபமும், விரக்தியும் சேர்ந்துதான் குஜராத் மாநிலம் முழுவதும் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வன்முறையாக, தாக்குதலாக மாறியுள்ளது.

 

நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள், அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் அச்சமான சூழலை ஏற்படுத்தி, பாதுகாப்பின்மையை உண்டாக்கும். இது நம்முடைய நாட்டின் வர்த்தக சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல.

குஜராத் மாநில அரசு உறுதியுடன், தீர்க்கமாகச் செயல்பட்டு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்து இந்தியர்களும் எந்த மாநிலத்திலும் சென்று வேலை செய்ய உரிமை உண்டு. அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. மாநிலத்தில் அமைதியை நிலைப்படுத்துவது மாநில அரசின் கடமையாகும். இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author