Last Updated : 31 Oct, 2018 08:39 AM

 

Published : 31 Oct 2018 08:39 AM
Last Updated : 31 Oct 2018 08:39 AM

கருணாநிதி, ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி, மாம் 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி மற்றும் மாம் (இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.

அதேபோல், சிறந்த இந்தியத் திரைப்படங்கள் வரிசையில் பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட், பாரம் உள்ளிட்ட 4 தமிழ் படங்கள் உட்பட 22 படங்கள் திரையிடப்பட உள்ளன.

கோவாவில் 49-வது சர்வதேசத் திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. 8 நாட்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திரைப்பட வசனக்கர்த்தாவுமான கருணாநிதி மற்றும் மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:

அரசியல்வாதியாக இருந்தா லும் கருணாநிதி ஒரு சிறந்த திரைப்படக் கலைஞராக இருந்த வர். அதேபோல், ஸ்ரீதேவியும் பல்வேறு மொழிகளின் சிறந்த நடிகையாக இருந்தவர். எனவே, கருணாநிதியின் கதை மற்றும் வசனத்தில் உருவான பராசக்தி (தமிழ்) மற்றும் ‘மாம்’ (இந்தி) ஆகிய திரைப்படங்களை கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி, அக்டோபர் 17, 1952-ல் தீபாவளி அன்று வெளியானது. இதற்கு கதை மற்றும் வசனத்தை கருணாநிதி எழுதியிருந்தார். கிருஷ்ணன் பஞ்சு இப்படத்தை இயக்கி இருந்தனர். அதேபோல், நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த ஆண்டு ஜுலை 7-ல் வெளியான இந்தி திரைப்படம் ‘மாம்’. உதய்வார் தயாரிப்பில் ஸ்ரீதேவியின் கடைசி திரைப்படமான இது, அவருக்கு இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தது.

கோவாவின் சர்வதேசத் திரைப்பட விழாவில், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் சிறந்த இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுவது வழக்கம். அவை, முழுநீளப் பல்வேறு மொழி திரைப்படங்களாக இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு 4 தமிழ் படங்கள் உட்பட 22 சிறந்த இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

4 தமிழ் படங்கள்

பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட், மற்றும் பாரம் ஆகிய 4 தமிழ் படங்களும் இதில் இடம் பெற்றுள்ளதாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள் ளது. இந்தத் திரையிடலுக்காக, இந்த ஆண்டு, 190 முழுநீள இந்தியத் திரைப்படங்கள் போட்டி யிட்டன. அதேபோல், இங்கு திரையிடும் குறும்படங்கள் வரிசையில் பல்வேறு மொழிகளின் மொத்தம் 109 படங்கள் போட்டி யிட்டிருந்தன. இவற்றில் 8 மராத்தி, ஆங்கிலம் 4, மலையாளம் மற்றும் 3 இந்தி உட்பட மொத்தம் 21 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. ஆனால், இந்த பட்டியலில் தமிழ் குறும்படங்கள் ஒன்றுகூடத் தேர்வாகவில்லை.

ரஜினியின் 2.0

பொதுப்பிரிவு திரைப்படங்களில் சல்மான் கானின் ‘டைகர் ஜிந்தா ஹை’, சஞ்சய் லீலா பன்ஸாலியின் ‘பத்மாவத்’ மற்றும் மெக்னா குல்சாரின் ‘ராஜி’ ஆகிய மூன்று படங்கள் தேர்வாகி உள்ளன. இதில், தெலுங்கு மொழியில் நடிகை சாவித்திரியின் கதையான ‘மஹாநடி’ எனும் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி நடித்து வெளியாகவுள்ள ‘2.O’, கடைசி நாளான நவம்பர் 28-ல் சிறப்பு வரிசையில் திரையிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, அப்படத்தின் இயக்குநர் ஷங்கருடன் செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x