Last Updated : 30 Oct, 2018 12:42 PM

 

Published : 30 Oct 2018 12:42 PM
Last Updated : 30 Oct 2018 12:42 PM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழர்களின் தீபாவளி கொண்டாட்டம்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் தமிழர்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டெல்லியின் தமிழ்நாடு இல்லம் முதன்மை உள்ளுறை ஆணையர் நா.முருகானந்தம், காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ.அண்ணாமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர், மருத்துவர், செவிலியர் மற்றும் நிர்வாகம் என பல்வேறு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் ‘தமிழர் சங்கமம்’ எனும் பெயரில் ஒரு கலாச்சார அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு காரணங்களுக்காக டெல்லி வந்து சிக்கலுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உடல்நலம் குன்றிய விவசாயிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், தமிழர் சங்கமத்தின் 6 ஆம் ஆண்டு விழாவுடன் சேர்த்து தீபாவளி கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இதில், மாற்றலாகிச் செல்லும் தமிழர்களான எய்ம்ஸ் பணியாளர்களுக்கு தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் முருகானந்தம் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எய்ம்ஸின் மருத்துவர்களான இதயத்துல்லா, தேவ சேனாதிபதி, ஜோசப் லூயி உள்ளிட்ட தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழா அரங்கில் தமிழ் நூல்கள் பார்வையாளர்களின் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது.

டெல்லியில் கடந்த வருடம் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் நிகழ்ந்தது. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் சேர்வதில் தமிழர்களின் ஒருபகுதியினர் இடையே தயக்கம் ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிலையில் உள்ளவர்களுக்கு உதவ எய்ம்ஸின் இந்த தமிழர் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தின் பல இடங்களிலும் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் தலைவர் வி.எம்.தனசேகர், செயலாளர் கார்த்திக் மற்றும் பொருளாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செவிலியர்களான பாரதி பிரியதர்ஷிணி மற்றும் ரம்யா ஹேமந்த் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுதி வழங்கி இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x