Last Updated : 23 Oct, 2018 08:39 PM

 

Published : 23 Oct 2018 08:39 PM
Last Updated : 23 Oct 2018 08:39 PM

‘மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்தது?’- வெளுத்து வாங்கிய சிவசேனா

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்து. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று பிரதமர் மோடியை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம், வெளியுறவுக்கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டின் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்கள் சென்ற வெளிநாட்டுப் பயணத்தைக் காட்டிலும் பிரதமர் மோடிதான் அதிக அளவு வெளிநாடுகளுக்குச் சென்று சாதனைப் படைத்துவிட்டார். மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு விளைந்த பயன் என்ன?

கடவுள் விஷ்ணுவின் மறுஅவதராமாக மோடி உருவெடுத்து இருக்கிறாரா என்ன. விஷ்ணு தனது பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது போன்று உலகம் முழுவதும் சென்று மோடி காட்சி கொடுத்து வருகிறார்.

பல்வேறு நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது இல்லை. ஒருவேளை மோடியின் வெளிநாட்டுப்பயணத்தின் மூலம் அந்த உறவுகள் முன்னேற்றம் அடைந்திருக்கலாம். ஆனால், இந்தப் பயணத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதனால், நமக்குக் கிடைத்தது என்ன?

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டுடன் ரபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தம் செய்தார், அதுவும் சிக்கலில் இருக்கிறது. ரஷ்யாவுடன் எஸ்-400ரக ஏவுகணை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது ஆனால், அதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தபடி, எப்-16 ரக போர்விமானங்களை வாங்க அமெரிக்கா வற்புறுத்துகிறது. ரஷியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா.

பாகிஸ்தானுக்கு ஏற்கனவே அமெரிக்கா எப்-16 ரக போர்விமானங்களை விற்பனை செய்துவிட்டது. பாகிஸ்தானுக்கு அந்த விமானங்கள் குறித்த அனைத்து ரகசியங்களும் தெரிந்துவிட்டது, இப்போது அதே போர்விமானத்தை இந்தியாவிடம் விற்க டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுவதைக் காட்டிலும் பல்வேறு நாடுகளுக்கு அந்த அமைதி பிடிக்கவில்லை. இரு நாடுகளும் பதற்றத்துடன், போர்தளவாடங்களை வாங்கினால்தான் தங்களுக்கு பணம் வரும் என்ற நோக்கில் செயல்படுகின்றன. ஈராக், ஈரான், சிரியா, லிபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகியநாடுகளில் எப்போதும் நிலைத்தன்மை வந்துவிடக்கூடாது என்று சில நாடுகள் நினைக்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடுகளும் உள்ளத்தில் இ ருந்து நட்புக்கரங்களை நீட்டவில்லை. நேபாளம்கூட இந்து நாடாக இருந்தாலும், சீனா, பாகிஸ்தான் சொல்படிதான் நடக்கிறது. ஆதலால் நாங்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவிடுவதால் என்ன பயன் கிடைத்திருக்கிறது?

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x