Last Updated : 16 Aug, 2018 07:57 PM

 

Published : 16 Aug 2018 07:57 PM
Last Updated : 16 Aug 2018 07:57 PM

’’வாஜ்பாய் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு’’ - பிரதமர் மோடி இரங்கல்

 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு, ஒரு சகாப்தம் முடிந்தது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 93.

வாஜ்பாயின் மறைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தத்துடன் இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

''பாஜகவின் மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் தேசத்துக்காக வாழ்ந்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் சேவை செய்தவர். மிகச் சிறந்த தலைமைப் பண்பும், தலைசிறந்த தலைவராகவும் விளங்கி, தேசத்தின் 21-ம் நூற்றாண்டுக்கான பயணத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர்.

வாஜ்பாயின் இழப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில், ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவருடன் பழகிய நாட்களையும், நினைவுகளையும் என்னால் மறக்கவும், எண்ணிக்கையிலும் வைக்க இயலாது.

என்னைப் போன்ற காரியகர்த்தாக்களுக்கு வாஜ்பாய் மிகப்பெரிய தூண்டுகோலாகஇருந்தவர். அவரின் கூர்மையான அறிவுத்திறனும், செயல்பாடும் என்னை எப்போதும் ஈர்க்கும். எதிர்கால கண்ணோட்டத்துடன் அவர் வகுத்த கொள்கைகள், பல்வேறு துறைகளை முன்னேற்ற அவர் எடுத்த நடவடிக்கைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் சென்று சேர்ந்தது.

பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும் சந்தித்து, பாஜக என்ற கட்சியை படிப்படியாகக் கட்டமைத்தவர் வாஜ்பாய். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்த வாஜ்பாய் பாஜகவின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்து, நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கியவர் வாஜ்பாய். பல்வேறு மாநிலங்களில் வலுவான வேர்பிடித்து பாஜக வளரவும் வாஜ்பாய் காரணமாகஅமைந்தார்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், பாஜகவின் தொண்டர்களுக்கும், லட்சக்கணக்கான அவரின் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.''

இவ்வாறு பிரதமர் மோடி இரங்கலில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x