Published : 02 Aug 2018 02:02 PM
Last Updated : 02 Aug 2018 02:02 PM

‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை: கேரளாவில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்படுகிறது

கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை இன்று எட்டிவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தரைப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுத்துள்ளது கேரள அரசு.

அணை திறக்கப்படும்போது மக்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்படும். 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட உள்ளதால், மக்கள் அணையைப் பார்வையிட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும், அணை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் கேரள அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

வளைவு வடிவ அணைகளில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அணை, இடுக்கி அணை. கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப் பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்துவரும் தீவிரமான தென் மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில் இப்போது, 2,397 அடி தண்ணீர் இருப்பதால், இன்று மாலைக்குள் அணை நிரம்பும் சூழல் உள்ளது. இதனால், செருதோனி அணை மதகுகளை திறக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 1996-ம் ஆண்டு இடுக்கி அணை தண்ணீர் செருதோனி அணை வழியாகத் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது.

இதற்கு முன் 1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது அதன்பின் இப்போது திறக்கப்பட உள்ளது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி இடுக்கி அணையில் 2,395 அடி நீர் இருப்பு வந்துள்ளது, வழக்கமாக 2,399 அடி வந்தால், தண்ணீர் திறக்கப்படும் ஆனால், இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,398 அடியை நீர் எட்டியவுடனே செருதோனி அணியின் மதகுகள் படிப்படியாக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

இது குறித்து கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்எம் மாணி திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், “வழக்கமாக இடுக்கி அணையில் 2,399 அடி வந்தால்தான் திறக்கப்படும் ஆனால், 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட இருப்பதால், முன்னெச்சரிக்கைக்காக 2,398 அடி வந்தவுடன் படிப்படியாக செருதோனி அணை திறக்கப்படும்.

தற்போது 2,397 அடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. இன்று மாலைக்குள் இடுக்கி அணையில் தண்ணீர் முழுக்கொள்ளளவை எட்டும் என நம்புகிறோம். தரைப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலும், பெரியாற்றின் கரைகளில் வசிக்கும் வீடுகளில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

எங்கே செல்கிறது இடுக்கி அணை நீர்?

செருதோனி அணையில் இருந்து திறக்கப்படும் நீர், தடியம்பாடு, கரிம்பன், சீலிச்சுவடு, கீரித்தோடு வழியாக லோயர் பெரியாறு அணையை அடைகிறது. அங்குள்ள அணை நிரம்பியவுடன், நீரியமங்கலம் வழியாக, பூத்தாத்தன்கீடி, காலடி, பெரம்பாவூர், ஆலுவா, வேம்பநாடு முகத்துவாரத்தின் வழியாகச் சென்று அரபிக்கடலில் கலக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x