Published : 01 Aug 2018 10:26 AM
Last Updated : 01 Aug 2018 10:26 AM

ரோஹிங்யாக்கள் சட்டவிரோத குடியேறிகள்; அகதிகள் அல்ல: விவரங்கள் சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேறிகள், அவர்கள் அகதிகள் அல்ல, எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதன் இறுதி வரைவுப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை.

வங்கதேசத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினரை திட்டமிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவ்வாறு தனியாக இனம் காணப்பட்ட 40 லட்சம் பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் புயலை கிளப்பியது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து பேசியதாவது:

‘‘மியான்மரில் இருந்து இந்தியா வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரோஹிங்யாக்களை பொறுத்தவரை அவர்கள் சட்டவிரோத குடியேறிகள்; அவர்களை அகதிகளாக மத்திய அரசு கருதவில்லை.

இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் குறித்த தகவல்களை மாநில அரசுகள் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களின் கைரேகைகளையும் சேகரிக்குமாறு கூறியுள்ளோம்.

அசாம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்குமாறு எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஹிங்யாக்கள் குறித்த புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைத்த பின், வெளியுறவு அமைச்சகம் மூலம் மியான்மர் அரசை தொடர்பு கொண்டு பேசுவோம்.

இதுபோலவே மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ‘‘இந்தியாவில் தற்போது 40 ஆயிரம் ரோஹிங்யாக்கள் இருப்பதாக தற்போதைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. அதிகஅளவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியேறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும், ஹரியாணா மாநிலம் மீவாட்டிலும், திரிபுராவிலும் அதிகஅளவில் குடியேறியுள்ளனர்’’ என்றார்

அப்போது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சுகதா போஸ் குறுக்கிட்டு மத்திய அரசு ரோஹிங்யா அகதிகளை மோசமாக நடத்துவதாக கூறினார். இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, அகதிகள் விஷயத்தில் நீண்டகாலமாகவே இந்தியா மனிதநேயத்துடன், மென்மையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x