Last Updated : 25 Jul, 2018 03:00 PM

 

Published : 25 Jul 2018 03:00 PM
Last Updated : 25 Jul 2018 03:00 PM

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பரிசீலிக்கப்படும்: சபாநாயகர் அறிவிப்பு

ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் அவையில் தவறான தகவல்களை அளித்த பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அளித்த உரிமை மீறல் தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த 20-ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர்விமானக் கொள்முதல் விலையின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பினார். ஏதோ காரணத்துக்காக அரசு ரபேல் போர் விமானக் கொள்முதல் விலையைத் தெரிவிக்க மறுக்கிறது. இதில் ரூ.45 ஆயிரம்கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதில் அளித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி பேசுகையில், ராகுலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரபேல் போர்விமானக் கொள்முதல் விலை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்து எனத் தெரிவித்தனர்.

ஆனால், இதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோனி, ஆனந்த் சர்மா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரான்ஸ் அரசுடன் ரபேல் போர்விமானம் வாங்குவதற்கான விலைப்பட்டியலையும் வெளியிட்டனர்.

அவையில் தவறான தகவலைக் தெரிவித்ததற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆகியோர் மீது உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர்தியா சிந்தியா ஆகியோர் உரிமை மீறல் தீர்மானத்தின் மீது கொடுக்கப்பட்ட மனு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே அமளியும், குழப்பமும் நிலவியது.

அப்போது இருதரப்பினரையும் சமானதானப்படுத்திய சபாநாயகர் சுமித்ரா மாகாஜன், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசீலனையில் இருக்கிறது. இது தொடர்பாக உரிமைமீறல் குழு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அப்போது பாஜக எம்.பி.க்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமைமீறல் தீர்மானத்தை கொண்டுவர மனு அளித்துள்ளோம். ஆதலால், பாஜக எம்.பி.க்களும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். ராகுலுக்கு எதிராக 4 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்த மகாஜன் அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x