Last Updated : 02 Jul, 2018 07:44 PM

 

Published : 02 Jul 2018 07:44 PM
Last Updated : 02 Jul 2018 07:44 PM

டெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்?

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(வயது 57). மற்றொரு மகள் இங்கு இல்லை.

பவனேஷ் மனைவி சவிதா (வயது48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் 8 பேருடைய உடற்கூறு ஆய்வு முடிந்தநிலையில், யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வினோதமான மூடப்பழக்கங்களைக் கடைப்பிடித்த இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர். இதனால், போலீஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக 11 பேரின் உறவினர்களும், தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

கொலை என சந்தேகம்

இது குறித்து இறந்த நாராயண் தேவியின் மகள் சுஜாதா நாக்பால் கூறுகையில், ''என் தாய், சகோதரர்கள், சகோதரி, குழந்தைகள் இறந்ததை ஊடகங்கள் கொச்சைப்படுத்தி தற்கொலை என்று கூறுகிறார்கள். என்னுடைய தாயிடம் நான் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் பேசும் பழக்கம் உடையவள். இறப்பதற்கு அன்று இரவுகூட செல்போனில் பேசினேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்,

நாங்கள் நல்ல படித்த, அறிவார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எந்தவிதமான சாமியார்கள் மீதும் மூடநம்பிக்கை வைக்கவில்லை. இது தற்கொலை அல்ல. ஊடகங்கள் இதைத் தற்கொலை என தவறாக கூறவேண்டாம், எங்கள் குடும்பத்தினர் யாரும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

மர்மம் இருக்கிறது

நாராயண் தேவியின் மற்றொரு உறவினர் கீதா தாக்ரல் கூறுகையில், ''கடந்த இருவாரங்களுக்கு முன்புவரை நாங்கள் ஒரு திருமணத்துக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருந்தோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், ஆனால், மூட நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல. எங்கள் குடும்பத்தினர் இறந்ததால், ஏதோ மர்மம் இருக்கிறது.மாந்திரிகவாதிகள் யாரோ இருக்கலாம் என சந்தேக்கிறோம்.

எங்களுடைய குடும்ப வியாபாரம் நல்லபடியாகத்தான் சென்றது. எந்தவிதமான கடனும் இல்லை, யாருடனும் சண்டையிடும் அளவுக்கு விரோதம் இல்லை. அடுத்து எங்கள் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அப்படி இருக்கும்போது, ஏன் அனைவரும் தற்கொலை செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இன்று 8 பேரின் உடற்கூறு ஆய்வுகள் முடிந்தநிலையில், யாருமே கொலை செய்யப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதில் வயதான பெண்ணின் கழுத்து மட்டும் கைகளால் பாதி நெறிக்கப்பட்டு, பின் கயிற்றால் இறுக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றவர்களின் வாய், கண், கைகள், கால்கள் கட்டப்பட்டு இருந்தன, காதில் பஞ்சு வைக்கப்பட்டு இருந்த நிலையில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இதில் தற்கொலை செய்துகொண்ட மீனு என்ற இளம் பெண் எம்பிஏ படிப்பதற்காக நுழைவுத்தேர்வுக்காகத் தீவிரமாக படித்து வந்துள்ளார் என்பதை அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் போலீஸார் மத்தியில் ஒருவிதமான குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அனைவரும் சாவில் மர்மம் இருப்பதாக கூறுவதும், இறந்தவர்கள் உடலில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதாலும் போலீஸார் விசாரணையை எந்தk கோணத்தில் கொண்டு செல்வது என திணறி வருகின்றனர். இன்னும் 3 பேருடைய உடற்கூறு அறிக்கை வர வேண்டியது இருக்கிறது, இறுதிஉடற்கூறு அறிக்கையும் கிடைத்தபின் விசாரணை தீவிரமடையும்.

போலீஸாரின் 10 கேள்விகள்

இதற்கிடையே போலீஸார் தரப்பில் சில இந்தத் தற்கொலை தொடர்பாக 10 விதமான கேள்விகளை முன்வைக்கின்றனர். அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

அவை.

1. இது கூட்டமாக தற்கொலை செய்யும் சம்பவமா அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவர் அனைவரையும் கொன்றுவிட்டு இறுதியில் தான் தற்கொலை செய்துகொண்டாரா?

2. வீட்டின் பிரதான கதவு உள்பக்கமாக பூட்டப்படவில்லை. இதனால் வெளியில் இருந்து யாரேனும் உள்ளே வந்து இதைச் செய்திருப்பார்களா என்றும் சந்தேகப்பட வைக்கிறது.

3.குடும்பத்தினர் வளர்த்து வந்த நாய் வீட்டின் மொட்டைமாடியில் கட்டப்பட்டு இருந்தது.யாரேனும் புதிதாக ஒருவர் வந்து கொலை செய்திருந்தால், நாய் குரைக்கும் சத்தம் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு ஏன் கேட்கவில்லை?

4. 10 பேரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில், 8 பேரின் கண்கள் கட்டப்பட்டு இருந்தன. ஏன் மற்ற 3 பேரின் கண்கள் கட்டப்படவில்லை.

5. வீட்டில் இருந்து இரு டைரிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் குடும்பத்தினருக்கு பல்வேறு வழிகாட்டி முறைகள் தரப்பட்டு இருந்தன. யார் இந்தக் குறிப்புகளை எழுதியது. குடும்பத்தினர் யாரேனும் எழுதினார்களா அல்லது ஏதேனும் மந்திரவாதிகள் எழுதிக்கொடுத்தார்களா?

6. கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்வது என்பது மூடநம்பிக்கையா அல்லது மத நம்பிக்கையா

7. வீட்டின் பின்புறம் ஒரே இடத்தில் 11 குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 7 குழாய்கள் யு வடிவத்திலும், 4 குழாய்கள் நேராகவும் உள்ளன. தற்கொலையில் 7 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள். அதை குறிப்பிட்டு இந்தக் குழாய் பொருத்தப்பட்டுள்ளதா?

8.வீட்டில் இருந்த வயதான பெண் தரையில் இறந்து கிடக்கும் போது, மற்றவர்கள் ஏன் மற்ற அறையில் தற்கொலை செய்தார்கள். வயதான பெண்ணை மட்டும் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய என்ன காரணம்?

9. வீட்டில் இருந்த ஒருவரும் தற்கொலைக்கான கடிதத்தை ஏன் எழுதவில்லை, அல்லது எழுதியது காணாமல்போய்விட்டதா

10. தற்கொலை செய்துகொண்டதில் 2 பேர் சிறுவர்கள். அவர்கள் தற்கொலை செய்யச் சம்மதம் தெரிவித்தார்களா, அல்லது தற்கொலை செய்யும் போது சத்தமிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x