Last Updated : 10 Jul, 2018 01:12 PM

 

Published : 10 Jul 2018 01:12 PM
Last Updated : 10 Jul 2018 01:12 PM

50 வயது நிறைந்த அரசு ஊழியர்களுக்கு திறன் தேர்வு; தேறாதவர்களுக்கு கட்டாய ஓய்வு: உபி அரசு முடிவு

உத்தரப் பிரதேசதத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 50 வயது நிறைந்த அரசு ஊழியர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி. மாநில அரசு அலுவலகங்களில் சுமார் 16 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் நான்கு லட்சம் பேர் 50 வயது நிறைந்தவர்கள். வயது காரணமாக, இவர்களால் பணியில் தொய்வு ஏற்படுவதாக உ.பி. அரசு கருதுகிறது. இதனால் அவர்களுக்கு திறன் தேர்வு நடத்த அம்மாநில அரச முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில் திறன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கட்டாய ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்ப இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 31-க்குள் அனைத்து துறைகளும் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. அரசு தலைமை செயலக அலுவல சங்க தலைவரான யதவேந்த மிஸ்ரா கூறும்போது, ‘இதுபோன்ற உத்தரவு கடந்த 1986 முதல் 2007 வரை என நான்கு முறை உத்தரவிடப்பட்டு அமலாக்க முடியாமல் தோல்வி அடைந்தது. அரசு அலுவலர்களை தொல்லைக்கு உள்ளாக்கவே தற்போது மீண்டும் உத்தரவு அனுப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்படும்.’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் இதுபோல் ஒரு உத்தரவிட்டிருந்தார். 50 வயதிற்கு நிறைந்தவர்கள் பட்டியலில் ஊழல் அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு என அறிவித்திருந்தார். இதை உபி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடுமையாக எதிர்த்ததால், இதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x