Published : 07 Jul 2018 07:49 AM
Last Updated : 07 Jul 2018 07:49 AM

11 ஆண்டு, 11 டைரி, 11 குழாய், 11 கம்பி, 11 பேர் தற்கொலையில் விலகாத மர்மங்கள்: காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் டெல்லி புராரியில் சடங்குகளா?

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பின்னர் 11 என்ற எண்ணை மறக்க முடியாத அளவுக்கு பல மர்மங்கள் நிலவுகின்றன.

டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் கடந்த 1-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாராயணி தேவி (77) என்ற மூதாட்டி ஒரு அறையில் தனியாக இறந்து கிடந்தார். இவரது மகள் பிரதிபா (57), மகன்கள் பாவ்னேஷ் (50), லலித் பாட்டியா (45). பாவ்னேஷின் மனைவி சவீதா (48), இவர்களுடைய குழந்தைகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவர்களுடைய மகன் சிவம் (15). பிரதிபாவின் மகள் பிரியங்கா (33) ஆகிய 10 பேரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அனைவரும் சொர்க்கத்தை அடைவதற்காக சடங்குகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதனால் அனைவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை செய்வதற்கு 11 பேரும், கடந்த 11 ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளனர். அதற்கேற்ப வீட்டில் 11 டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள குறிப்புகள் கடந்த 11 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்துள்ளன. டைரியில் உள்ள கடைசி குறிப்பில், ‘‘கடைசி விருப்பம் நிறைவேறும் கடைசி நிமிடத்தில் வானம் நகரும், பூமி நடுங்கும். அந்த நேரத்தில் பயப்படாதீர்கள். இன்னும் ஆக்ரோஷமாக மந்திரங்கள் சொல்லுங்கள். நான் வருவேன். உங்களை மூழ்க செய்வேன். மற்றவர்களும் மூழ்க உதவி செய்வேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதை போலீஸார் செய்தியாளர்களிடம் படித்துக் காண்பித்தனர்.

அத்துடன், வீட்டுக்கு உள்ளிருந்து வீட்டு சுவருக்கு வெளியில் சிறிது நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் 11 பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டில் நுழைவு கதவு அருகே 11 கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் எதற்காக ஒரே எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன என்பது மர்மமாக உள்ளது. அதேநேரத்தில் 11 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதை வைத்து பார்க்கும் போது, மூட நம்பிக்கையால் சடங்குகள் என்ற பெயரில் அவற்றை வைத்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

குறிப்பாக 11 பிளாஸ்டிக் குழாய்கள் வீட்டுச் சுவருக்கு வெளியில் காலி நிலத்தை நோக்கி இருக்கும்படி பதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 4 குழாய்கள் நேராகவும், 7 குழாய்கள் சற்று வளைவாகவும் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு குழாய் மட்டும் சுவரில் சற்று இடைவெளி விட்டு உள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறும்போது, ‘‘இறந்த 11 பேரில், 4 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள். இதை குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களைப் பதித்திருக்கலாம். தனியாக உள்ள ஒரு குழாய் - தனி அறையில் இறந்து கிடந்த மூதாட்டி நாராயணி தேவியை குறிப்பதாக இருக்கலாம்’’ என்கின்றனர்.

இதற்கிடையில், வீட்டுக்கு முன் கதவு அருகில் 11 கம்பிகள், சுவரில் 11 பிளாஸ்டிக் குழாய்கள் பதித்த கான்ட்ராக்டர் மற்றும் வெல்டர் கூறும்போது, ‘‘11 என்ற எண்ணுக்கு பின்னால் எந்தத் திட்டமோ, உத்தரவோ இல்லை’’ என்று மறுத்துள்ளனர்.

இந்த தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி கூறும்போது, ‘‘வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் உள்ள தகவல்களுக்கும் 11 குழாய்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள், டைரிகளில் லலித் பாட்டியாதான் எழுதி இருப்பார் என்று நம்புகிறோம். அதில் உள்ள குறிப்புகள், கடவுள் அல்லது இறந்து போன அவரது தந்தையை குறிப்பதாக இருக்கலாம். குடும்பத் தலைவர் போபால் சிங் கடந்த 2007-ம் ஆண்டு இறந்துள்ளார். அதனால் குடும்பத்தினர் மிகவும் மனமுடைந்துள்ளனர். அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர் அவரது மகன் லலித் பாட்டியா என்று தெரிகிறது. அதன்பின், தந்தையின் ஆத்மா தன்னை எடுத்துக் கொண்டதாகவும், விரைவில் குடும்பத் தலைவனாவேன் என்றும் லலித் பாட்டியா குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். அதன்பின், நாராயணி தேவியைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் லலித் பாட்டியாவை ‘தந்தை’ என்றே அழைத்து வந்துள்ளனர். போபால் சிங் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலையில் அவர்கள் சடங்குகளைத் தொடங்கி உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரி கூறும்போது, ‘‘இறந்து போவதற்காக அவர்கள் தூக்கில் தொங்கி இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சக்தியால் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’’ என்கிறார்.

எனினும், 11 ஆண்டுக்கு முன்பு இறந்த தந்தையின் ஆத்மா, 11 பேர், 11 பிளாஸ்டிக் குழாய், 11 கம்பி, 11 ஆண்டு, 11 டைரி என்பதெல்லாம் மர்மமாக இருக் கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x