Published : 06 Jun 2018 01:58 PM
Last Updated : 06 Jun 2018 01:58 PM

கர்நாடகாவிலும் வெளியாகிறது ‘காலா’- 150 திரையரங்குகளில் திரையிட திட்டம்

கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளபோதிலும், குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால், கர்நாடகாவிலும் நாளை 150 திரையரங்குகளில் காலா படம் வெளியாகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ள‌து. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர்.

கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கர்நாடகாவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை, கர்நாடக அரசு திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’’ என கூறினார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தபோதிலும், சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக பெங்களூரு நகரில் மும்பையைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. கர்நாடகா முழுவதும் 150 தியேட்டர்களில் அந்த படம் வெளியிடப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் பயம் இல்லை என வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் உமேஷ் பங்கர் கூறுகையில் ‘‘காலா படத்தை தனிப்பட்ட சில விநியோகஸ்தர்கள் வெளியிடும்போது, அதை தடுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் சொந்த பொறுப்பில் படத்தை வெளியிடுகின்றனர்’’ எனக் கூறினார்.

அதேசமயம் சில கன்னட அமைப்புகள் தொடர்ந்து காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் நாளை காலா படம் வெளியாகும்போது தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என அவர்கள் அறிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ளவர்கள் காலா படத்தை பார்க்கக்கூடாது, காவிரிக்காக அனைவரும் ஓரணியில் திரண்டு காலாவை எதிர்க்க வேண்டும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகாராஜ் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x