Last Updated : 17 Jun, 2018 07:19 PM

 

Published : 17 Jun 2018 07:19 PM
Last Updated : 17 Jun 2018 07:19 PM

‘மாநில விவகாரங்களில் தலையிடாதீர்கள்’: நிதிஆயோக் கூட்டத்தில் மத்திய அரசை வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சி முதல்வர்கள்

 

மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியைப் பின்பற்ற வேண்டும், மாநில விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக ராஜிவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் 15-வது நிதி ஆணையத்தின் அறிக்கை, மாநிலங்களுக்கு நிதிப்பங்கீடு ஆகியவை குறித்து மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கூட்டாட்சி அமைப்பை பலவீனமடையச் செய்கிறது என்று கடுமையாக தாக்கிப் பேசினார்கள்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், 'இந்த நிதி ஆயோக் மாநிலங்களுக்காக எதையும் செய்யவில்லை. மாநிலங்களின் பிரச்சினைகளை எப்போதாவது மத்திய அறிந்து கொள்ள முயற்சித்தது உண்டா? ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்சினைகள் இருக்கின்றன. மத்திய அரசு கொள்கைகள்தான் வகுக்கின்றன. ஆனால், மாநில அரசுகள்தான் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன.

மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், தேவையில்லாமல் மாநிலங்களின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது. கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

அதேபோல கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விவசாய கடன் தள்ளுபடி குறித்த பிரச்சினையை மத்திய அரசிடம் எழுப்பினார்கள்.

குறிப்பாகக் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசுகையில், 'விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு 50 சதவீதம் நிதி உதவி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் 85 லட்சம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் நிலுவை இருக்கிறது. கடும் வறட்சி காரணமாக, விவசாயிகளின் வேதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு 50 சதவீத நிதியை அளிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், 15-ம் நிதி ஆணையத்தில் மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதியில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x