Published : 05 Jun 2018 09:06 AM
Last Updated : 05 Jun 2018 09:06 AM

பிஹாரில் நிதிஷ் குமார்தான் ‘பிக் பாஸ்’: பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் விடுத்த செய்தி

பிஹாரை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முகமாக முதல்வர் நிதிஷ் குமார்தான் இருக்க வேண்டும் என்று அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.

உ.பி., பிஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ள அடுத்த சில நாட்களில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இதனை கூறியுள்ளது. இது பாஜகவுக்கு விடுக்கும் செய்தியாக கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் பிஹாரில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் 7-ம் தேதி சந்தித்துப் பேசுகிறது. அப்போது 2019 மக்களவை தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக விவாதிக்கும் எனத் தெரிகிறது.

இதையொட்டி ஜேடியு மூத்த தலைவர்கள், பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது பிஹாரில் 2015 தேர்தலில் நிதிஷ் குமார் - லாலு கூட்டணி தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரும் உடனிருந்தார்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு ஜேடியு தேசிய பொதுச் செயலாளர் பவன் வர்மா கூறும்போது, “பிஹாரில் என்டிஏ முகமாக நிதிஷ் குமார் விளங்குகிறார். அதனால்தான் அவர் முதல்வராக இருக்கிறார். கூட்டணியில் மிகப்பெரும் கட்சியாக ஜேடியு உள்ளது” என்றார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் ஜேடியு-வும் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக 22 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் பிஹார் சட்டப் பேரவையில் தற்போது ஜேடியு பலம் 70 ஆகவும் பாஜக பலம் 50 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்று ஜேடியு எதிர்பார்க்கிறது. மேலும் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக இனிமேலும் பெரியண்ணன் தோரணையில் நடந்துகொள்ளக் கூடாது என தெளிவுபடுத்தும் விதமாகவே ஜேடியு இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

என்றாலும் ஜேடியு-வின் இந்த கருத்தால் கூட்டணியில் சச்சரவு ஏதுமில்லை என பாஜக கூறியுள்ளது. பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறும்போது, “மனங்கள் ஒன்றுபட்ட பிறகு தொகுதிப் பங்கீடு பெரிய விஷயமல்ல. பேச்சுவார்த்தை மூலம் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்படும். நிதிஷ் குமார் முதல்வாரக இருப்பதால் பிஹாரில் அவரே என்டிஏ பிரச்சார முகமாக இருப்பார். இதில் சந்தேகம் வேண்டாம். எங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதமர் மோடியின் புகழுக்கும் நிதிஷ் குமார் செய்த நல்ல பணிகளுக்குமாக இருக்கும். இதில் முரண்பாடு எங்கே உள்ளது?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x