Published : 03 Jun 2018 08:20 AM
Last Updated : 03 Jun 2018 08:20 AM

2ஜி வழக்கின் தீர்ப்பில் குறைபாடுகள்: மேல்முறையீட்டு மனுவில் சிபிஐ வாதம்

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்று சிபிஐ தனது மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளது.

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் விடுதலை செய்தது. சிபிஐ தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை எனவும் ஊகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சிபிஐ சுமத்தியுள்ளதாகவும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மார்ச் மாதம் மேல்முறையீடு செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

2ஜி வழக்கில் சிறப்பு நீதிபதி வழங்கிய தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆவண ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், வழக்கின் பின்னணி ஆகியவற்றில் சிறப்பு நீதிபதி தனது மனதை முழுமையாக செலுத்தவில்லை.

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகனவதி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் டி.எஸ். மாத்தூர், ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி உள்ளிட்டோரின் நம்பத்தகுந்த சாட்சியங்களை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி புறக்கணித்துள்ளார்.

2002-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவுகளுக்கு தவறான விளக்கம் அளித்து மிகப்பெரிய தவறு செய்துள்ளார். முதன்மை வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார் என்பதாலேயே அவ்வழக்கு தொடர்பான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் இருந்தும் அவரை விடுவிப்பது தவறாகும்.

2ஜி அலைக்கற்றைக்கு விண்ணப்பிக்க போதிய கால அவகாசம் அளிக்காததன் மூலம் ஆ.ராசா தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதை சிறப்பு நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். ஆ.ராசா தவறான பலன் அடைந்ததை காட்டும் பணப் பரிவர்த்தனைக்கான ஆவண ஆதாரங்கள் இருந்தபோதும் சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x