Published : 18 Jun 2018 09:14 AM
Last Updated : 18 Jun 2018 09:14 AM

பிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி டெல்லியில் பேரணி

டெல்லியில் பிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி, இடதுசாரி தொண்டர்கள் நேற்று பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் 3 அமைச்சர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையங்கள் மூடல்

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தொண்டர்கள் நேற்று மாலை டெல்லி மண்டி ஹவுஸில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களும் இணைந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து டெல்லியின் பல்வேறு சாலைகளில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தினர். நாடாளுமன்ற சாலையில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீடு வீடாக சோதனை நடத்தி பொதுமக்களை போலீஸார் மிரட்டி வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியபோது, “ஐஏஎஸ் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப வேண்டும். துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அநீதி இழைத்து வருகிறார். இந்தப் பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துரைக்கவே பேரணியாக சென்றோம். ஆனால் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்” என்று தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம்

ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க தலைவர் மணீஷா சக்சேனா டெல்லியில் நேற்று கூறியதாவது: டெல்லி யூனியன் பிரதேச அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல்கள் பொய். அனைத்து வேலைநாட்களிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து துறைகளின் கூட்டங்களிலும் பங்கேற்கின்றனர். விடுமுறை நாட்களில்கூட அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x