Last Updated : 05 Jun, 2018 03:35 PM

 

Published : 05 Jun 2018 03:35 PM
Last Updated : 05 Jun 2018 03:35 PM

‘எனக்கு தொல்லை கொடுக்காத டெல்லி ஆளுநர் மீது மோடி படுகோபம்’: அரவிந்த் கேஜ்ரிவால் கிண்டல்

எனக்கும், ஆம்ஆத்மி அரசுக்கும் தொல்லை கொடுக்காத டெல்லி லெப்டினென்ட் கவர்னர் மீது பிரதமர் மோடி கடும் கோபமாக இருக்கிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ட்வீட் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

‘‘டெல்லியில் தற்போது இருக்கும் ஆளுநர்  அனில் பைஜால் மீது பிரதமர் மோடி கடும் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், கவர்னர் பைஜால் எனக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் போதுமான தொந்தரவுகள் ஏதும் கொடுக்கவில்லை என்பதால், மோடி அவர் மீது கோபமாக இருக்கிறார் என நினைக்கிறேன்.

ஏனென்றால், டெல்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்யும் போது, அதை முடக்கும் வகையில், எங்களுக்கு ஆளுநர் மூலம் மத்தியஅரசு தொல்லை கொடுத்து வந்தது.

ஆனால், எனக்கும், ஆம்ஆத்மி அரசுக்கும் போதுமான இடையூறுகளையும், தொல்லைகளையும் கொடுக்காத காரணத்தால், நஜீப் ஜங் பதவியில்இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார்.

எனக்குக் கிடைத்த தகவலைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி அரசு செய்யும் நல்ல திட்டங்கள், கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் என எந்த துறையிலும் நல்ல திட்டங்கள் செய்தாலும் அதை முடக்கி, நிறுத்தி வைக்கப் பிரதமர் மோடி, ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவிடமாட்டோம். மக்களுக்கான பணிகள் தொடர்ந்து நடக்கும். கடவுளும், மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்.

பாஜகவுக்கு வாக்களித்தால், நகரங்களின் பெயர்களும்,ரயில்நிலையங்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்படும். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் வளர்ச்சி அடையும்’’

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x