Last Updated : 17 Jun, 2018 01:04 PM

 

Published : 17 Jun 2018 01:04 PM
Last Updated : 17 Jun 2018 01:04 PM

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிதான் இலக்கு : நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் கொண்டு செல்வதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரத மர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக ராஜிவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் நிதி ஆண்டின் கடைசி காலிறுதிவரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகிறது. இப்போது நாட்டின்முன் இருக்கும் முக்கிய சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதுதான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதிய இந்தியா எனும் இலக்கை வரும் 2020-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிதி ஆயோக்கின் நிர்வாகக்குழு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை உண்டாக்கும்.

பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளையும், நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

கொள்கைகளை வகுப்பது, துணைக் குழுக்கள் உருவாக்குவது, ஸ்வச் பாரத் இயக்கம், டிஜிட்டல் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டு செல்ல மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் கிடைக்கும். கல்விக்கான சமக்ர சிக்சா அபியானில் முழுமையான அணுகுமுறை அவசியம்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டம், ஜன் தன்யோஜனா, ஸ்டான்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு நிதி உள்ளீடுகளைக் கொண்டுவரும். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இந்தத் திட்டங்கள் போக்கும்.

இந்தியாவில் எந்தவிதத்திலும் திறமைக்கோ, திறனுக்கோ, வளத்துக்கோ பற்றாக்குறை இல்லை. மாநிலங்களுக்கு நிதி வழங்குவது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை ரூ.6 லட்சம் கோடி என்ற என்றநிலையில் இப்போது மாநிலங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி தரப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய விஷயங்களான விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, சமூக மாற்றத்துக்கான மாவட்டங்களில் வளர்ச்சி, ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்திராதனுஷ், ஊட்டசத்து இயக்கம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x