Published : 26 Aug 2014 04:35 PM
Last Updated : 26 Aug 2014 04:35 PM

கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜினாமா

கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித் (76) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1998 முதல் 2013 வரை டெல்லி முதல்வராக பதவி வகித்த அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து கேரள மாநில ஆளுநராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

மத்தியில் பாஜக தலைமை யிலான அரசு பதவியேற்ற பின்னர் ஷீலா தீட்சித் விலகக் கோரி நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பதவி விலக மறுத்துவிட்டதால் வடகிழக்கு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் திங்கள்கிழமை ஷீலா தீட்சித் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து திருவனந்தபு ரத்தில் நிருபர்களிடம் செவ்வாய்க் கிழமை அவர் பேசியபோது,

ஆளுநர் பதவியை திங்கள் கிழமையே ராஜினாமா செய்து விட்டேன் என்றார்.

எதிர்கால திட்டம் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எனது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிப்பேன், இப்போதைக்கு வேறு எதையும் கூற விரும்பவில்லை என்றார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியபோது, ,ஷீலா தீட்சித் அவராகவே பதவி விலகியுள்ளார், இனிமேல் அவர் காங்கிரஸ் கட்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பதவி விலகும் 8-வது ஆளுநர் ஷீலா தீட்சித் ஆவார்.

குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால் பதவி விலக மறுத்ததால் அவர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஆளுநராகப் பணியாற்றியபோது பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியாவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

எம்.கே.நாராயணன் (மேற்கு வங்கம்), அஸ்வினி குமார் (நாகாலாந்து), பி.எல்.ஜோஷி (உத்தரப் பிரதேசம்), பி.வி. வாஞ்சூ (கோவா), சேகர் தத் (சத்தீஸ்கர்) ஆகியோர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x