Published : 09 Jun 2018 08:02 AM
Last Updated : 09 Jun 2018 08:02 AM

அமைச்சர் பதவி கேட்டு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி; சமாதானப்படுத்தும் முயற்சியில் குமாரசாமி: துணை முதல்வர் பரமேஸ்வரை முற்றுகையிட்ட காங்கிரஸார்

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்பி பாட்டீல், ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோரை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வரும் சந்தித்து சமாதானப்படுத்தினர்.

கர்நாடகாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரும் கடந்த 23-ம் தேதி பதவியேற்றனர். கடந்த 6-ம் தேதி காங்கிரஸைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், மஜதவில் 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். காங்கிரஸில் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான எம்பி பாட்டீல், ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதிருப்தி அடைந்துள்ள எம்.பி. பாட்டீல், ரோஷன் பெய்க், சதீஷ் ஜோர்கிஹோலி உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென காங்கிரஸ் அலுவலகத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றவர்களையும், தூக்கு கயிறை கழுத்தில் மாட்டியவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அதில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சதீஸ் ஜோர்கிஹோலி, எம்.டி.பி.நாகராஜ், ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ், சதீஷ் ஜோர்கிஹோலி உள்ளிட்டோரை துணை முதல்வர் பரமேஸ்வர் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, பரமேஸ்வர் பெங்களூருவில் உள்ள எம்பி பாட்டீல் வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்த முயன்றார். அங்கு திரண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸின் லிங்காயத் எம்எல்ஏக்களும், எம்பி பாட்டீலின் ஆதரவாளர்களும் பரமேஸ்வருக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்குபரமேஸ்வரும் சத்தம் போட்டார். அவரை பாட்டீல் சமாதானப்படுத்தினார்.

குமாரசாமி, எம்பி பாட்டீலின் வீட்டில் சந்தித்து, 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த உதவுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், சித்தராமையா, தேவகவுடா ஆகியோர் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.

அப்போது உடனடியாக‌ அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x